சென்னை:
தமிழக பக்தர்களின் பிரார்த்தனைகளுடன், ஹிந்து தர்மார்த்த ஸமிதி சார்பில் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் இன்று (அக்.2) தொடங்கியது.
ஊர்வலத்தை திருக்குறுங்குடி ஜீயர் மடம், மடாதிபதிகள் ஸ்ரீஸ்ரீ பேரருளாள ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் 50வது பட்டம் (வர்த்தமான ஸ்வாமி) ஆசி வழங்கி தொடங்கி வைத்தார்.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்தின் போது, ஏழுமலையானின் கருட சேவைக்கு, தமிழக பக்தர்கள் சார்பில் வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான ஸ்ரீ திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம், சென்னை சென்னகேசவ பெருமாள் கோயிலில் இருந்து இன்று, காலை 10:30 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. முன்னதாக திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
அதைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் தொடக்க விழா நடந்தது.
நாடு வலிமை பெறவும், மக்கள் நலமும் வளமும் பெறவும், விவசாயம் செழிக்கவும், நீர்வளம் பெருகவும் சங்கல்பம் எடுத்துக் கொள்ளப்பட்டது. காலை 11:30 மணிக்கு மேல் ஊர்வலத்தை திருக்குறுங்குடி ஜீயர் மடம் மடாதிபதிகள் ஸ்ரீஸ்ரீ பேரருளாள ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் 50வது பட்டம் (வர்த்தமான ஸ்வாமி) காவி கொடியை அசைத்து தொடங்கி வைத்தார்.
திருக்குடை ஊர்வலம், என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக சென்றது. பின்னர், யானைக்கவுனி பாலம், சூளை நெடுஞ்சாலை, ஏ.பி.ரோடு, வடமலையான் தெரு, தாணா தெரு, செல்லப்பா தெரு வழியாக இரவு அயனாவரம் காசி விசுவநாதர் கோயிலை சென்றடைகிறது. இரவு, அங்கு, திருக்குடைகளை வரவேற்று, லஷ்மண் ஸ்ருதியின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அக்டோபர் 3ம் தேதி முதல் சென்னை அயனாவரம், வில்லிவாக்கம், திருமுல்லைவாயில், திருவள்ளூர் வரை திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். பின்னர், அங்கிருந்து திருமலையை சென்றடையும். சென்னையில் இன்று தொடங்கி அக்டோபர் 7ம் தேதி திருமலை செல்லும் திருக்குடை ஊர்வலத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் திரண்டு தரிசிப்பர்.
திருக்குடைகளை வழிப்பட்டால், நினைத்த காரியம் நிறைவேறும், திருமண தடை அகலும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் பெருகும். தொழில் செழிக்கும். செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.