பட்டதாரிகள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் புதிய குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை ஆரம்ப சம்பளமாக பயன்படுத்துவதற்கு எதிராக முதலாளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறுகிறார். கடந்த வெள்ளிக்கிழமை 2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் 1,500 ரிங்கிட்டிலிருந்து 1,700 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டது.
ஊழியர்களின் திறன்கள் மற்றும் கல்வித் தகுதிகளைப் பிரதிபலிக்கும் வகையில் சம்பளம் வழங்குவது நல்லது. குறைந்தபட்ச ஊதியம் அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்தைத் தொடங்குவதற்கான அளவுகோலாக இருக்கக்கூடாது. குறைந்தபட்ச ஊதியத்தில் இந்த சரிசெய்தல் என்பது மிக அடிப்படையான தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு உத்தியாகும். குறிப்பாக தற்போது 1,700 ரிங்கிட்டிற்க்குக் கீழே சம்பாதிக்கும் 4.35 மில்லியன் தனிநபர்கள இருக்கின்றனர்.
கல்வித் தகுதிகள், வேலை திறன்களுடன் சம்பளத்தை சீரமைப்பதன் மூலம், நிறுவனங்களும் பயனடையலாம். ஊழியர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்படாவிட்டால், திறமையை இழக்க நேரிடும் மற்றும் திறமையான மனிதவளத்தை ஈர்ப்பதில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் இன்று தெரெங்கானுவின் மெராங்கில் நடந்த ஒரு நிகழ்வில் கூறினார்.
வெள்ளியன்று தனது பட்ஜெட் உரையில், நிதியமைச்சராக இருக்கும் பிரதமர் அன்வார் இப்ராஹிம், முதலாளிகள் அல்லது சிறு தொழில்முனைவோருக்கு பிப்ரவரி 1, 2025 மற்றும் ஐந்துக்கும் குறைவான பணியாளர்கள் இருக்கும் அலுவகலத்தில் ஆகஸ்ட் 1, 2025 முதல் குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு 1,700 ரிங்கிட்டாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
வழங்கப்பட்ட ஊதிய சீரமைப்பு காலம் நியாயமானது மற்றும் போதுமானது என்று சிம் வலியுறுத்தினார். நிறுவப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்குமாறு முதலாளிகளை வலியுறுத்தினார். குறைந்தபட்ச ஊதியம் உட்பட தொழிலாளர் சட்ட மீறல்கள் குறித்து அறிந்த எவரும், அத்தகைய நிகழ்வுகளை அமைச்சகத்திற்கு, குறிப்பாக தொழிலாளர் துறைக்கு புகார் செய்யுமாறு அவர் ஊக்குவித்தார்.
குறைந்தபட்ச ஊதிய உயர்வு என்பது முதலாளிகளுக்கு சுமையை ஏற்படுத்தும் நோக்கம் அல்ல என்று அவர் தெளிவுபடுத்தினார். மாறாக, இது ஊழியர்களின் வாங்கும் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது உள்ளூர் தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிகங்களுக்கு மறைமுகமாக பொருளாதார நன்மைகளை உருவாக்கும்.