சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் எம்எச்370 விமானத்தை தேடி கண்டுபிடிப்பதற்கான ஒரு புதிய பரிந்துரை தொடர்பில் ஓசிஎன் இன்பினிட்டி நிறுவனத்துடன் அரசாங்கம் பேச்சு நடத்தி வருகிறது. வலுவான புதிய ஆதாரம் இருக்குமானால் அந்த விமானத்தை தேடுவதில் அரசாங்கம் நிச்சயம் முனைப்பு காட்டும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
15,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்து மா கடலின் தென் பகுதியில் தேடும் பணியில் ஈடுபட இங்கிலாந்தில் தளத்தை கொண்ட ஓசிஎன் இன்பினிட்டி அப்பரிந்துரையை முன் வைத்தது என்று அமைச்சர் குறிப்பிட்டார். கண்டுபிடிக்காவிட்டால் கட்டணம் இல்லை என்ற கோட்பாட்டின் படி தேடும் பணி மேற்கொள்ளப்படும். அதாவது விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கபடவில்லையே அரசாங்கம் எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை என்பது இதன் அர்த்தம் என்றார் அமைச்சர்.
எம்எச்370 விமானத்தை தேடும் முயற்சி தொடர்பில் மெர்போக் தொகுதி பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அபி ஹசானும், கம்பார் தொகுதி பக்காத்தான் ஹரப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் சோங் ஜமீனும் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
நடப்பு தரவுகள் மீதான ஆய்வுகளின் அடிப்படையில் ஓசிஎன் இன்பினிட்டி விமானத்தை தேடும் புதிய பரிந்துரையை தாக்கம் செய்திருக்கிறது என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார். எம்எச் 370 விமானத்தின் பதிவு பெற்ற உரிமையாளர் எனும் முறையில் அரசாங்கம் இந்த பரிந்துரையை பரிசீலினை செய்யக் கூடும் என்று அவர் சொன்னார். விமான போக்குவரத்து சேவையில் இதுவரை எம்எச்370 விமானம் காணாமல் போனது மிகப்பெரிய மர்மமாக நீடித்து வருகிறது.
2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி 239 பயணிகள் – சிப்பந்திகளுடன் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங் நோக்கி புறப்பட்ட அந்த விமானம் ராடார் திரையில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போனது.
சோங் எழுப்பிய இன்னொரு கேள்விக்கு பதிளித்த அமைச்சர், புதிய தேடும் பணிக்கான எந்த உடன்பாடும் அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற வேண்டும் என்றார். அங்கீகரிக்கப்பட்ட பின் அதன் விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.