சென்னை, வளசரவாக்கத்தில் ஆறு ஆண்டுகளாகக் கொத்தடிமைகளாக இருந்த சிறுவர்கள் மீட்பு

சென்னை:

சென்னை, வளசரவாக்கத்தில் ஆறாண்டுகளாகக் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வந்த சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேரைக் காவல்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

அவர்களில் 13 வயது நிரம்பிய சிறுவர் இருவர், 17 வயதுச் சிறுமி, 20 வயதுப் பெண், 34 வயதுப் பெண் ஆகியோர் அடங்குவர்.

வளசரவாக்கத்தில் ரஷீதா என்பவர் சிறுவர்களை அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்தி வேலை வாங்குவதாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் தங்கபாண்டியன் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறை அதிகாரிகள் ரஷீதாவின் வீட்டில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு, கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட ஐவரை அதிகாரிகள் மீட்டனர்.

பெரிய மாளிகை வீடான ரஷீதா வீட்டில், அனைத்து வேலைகளையும் இந்த ஐந்து பேர்தான் செய்து வந்தனர். அவர்களுக்கு வீட்டைவிட்டு வெளியில் செல்ல அனுமதியில்லை. அத்துடன், அவர்கள் என்ன செய்தாலும் அனுமதி பெற்றுத்தான் செய்ய வேண்டும்.

நலத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்ட அந்த ஐவரிடமும் காவல்துறை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர். விசாரணையில், திருப்பதியைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி அங்கு மூவாண்டுகளாக இருந்துள்ளார். அவரை 3 லட்ச ரூபாய் முன்பணம் கொடுத்து வாங்கினார் ரஷீதா. மேலும், 20 வயதுப் பெண்ணை 4 லட்சத்திற்கு வாங்கிய அவர், இரண்டு சிறுவர்களைத் தலா ஒரு லட்ச ரூபாய் முன்பணம் செலுத்தி வாங்கியதும் தெரியவந்தது.

மீட்கப்பட்ட ஐவரும் மயிலாப்பூர், கெல்லீஸ், தாம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு காப்பகங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷீதாவைக் கைது செய்த வளசரவாக்கம் காவல்துறை அதிகாரிகள், அவர்மீது குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டம், குழந்தைகளைக் கொடுமைப்படுத்துதல், கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here