நீலாய்: வடக்கு தெற்கு விரைவுச் சாலையின் 275.7 கி.மீட்டர் வழியாக பெட்ரோலியம் ஏற்றிச் சென்ற டேங்கர் லோரியின் பின்புறம் கார் மோதியதில் 22 வயது இளைஞர் செவ்வாய்க்கிழமை (நவ. 26) காலை உயிரிழந்தார். அதிகாலை 4.40 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், தனியாக வாகனம் ஓட்டிச் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று நீலாய் காவல்துறைத் தலைவர் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் டேங்கர் லோரி, மலாக்காவிலிருந்து ஶ்ரீ கெம்பாங்கன் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, கார் அதன் பின்புறத்தில் மோதியது. தள மேற்பார்வையாளராக இருந்த கார் டிரைவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விசாரணையில் உதவி செய்ய நேரில் கண்ட சாட்சிகள் முன்வர வேண்டும் என்று அப்துல் மாலிக் வலியுறுத்தினார். அவர்கள் 010-455 4359 என்ற எண்ணில் விசாரணை அதிகாரி ரோஸ்லோயிசா முகமட் லுய்டின் அல்லது மாவட்ட காவல் நிலையத்தை 06 790 4389 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சாலை போக்குவரத்து சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றார்.