சூட்கேசுக்குள் வைத்து பூட்டியதில் காதலன் மரணம்- காதலிக்கு ஆயுள் தண்டனை

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோ நகரை சேர்ந்த பெண் சாரா பூன் (வயது 47). இவரும் ஜார்ஜ் டோரஸ் (42) என்பவரும் காதலித்து வந்தனர். ஒரே வீட்டில் வசித்து வந்த இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ந் தேதி வீட்டுக்குள் கண்ணாமூச்சி விளையாடினர். இருவரும் அதீத மதுபோதையில் இந்த விளையாட்டை விளையாடினர். விளையாட்டின்போது காதலர் ஜார்ஜ் டோரசை சாரா ஒரு சூட்கேசுக்குள் வைத்து பூட்டினார்.

பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் சாரா, காதலன் தாமாக சூட்கேசில் இருந்து வெளியே வருவார் என நினைத்துக் கொண்டு தூங்க சென்றுவிட்டார். மறுநாள் காலை எழுந்து காதலனை தேடினார். பின்னர் அவரை சூட்கேசுக்குள் வைத்து பூட்டியது நினைவு வந்து பதறியடித்துக் கொண்டு சூட்கேசை திறந்தார். அப்போது ஜார்ஜ் டோரஸ் சூட்கேசுக்குள் பிணமாக கிடந்தார். அவர் மூச்சு திணறலுக்கு ஆளாகி இறந்தது தெரியவந்தது.

இந்த விவகாரத்தில் சாராவை கைது செய்த போலீஸார் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த திங்கட்கிழமை நடந்தது. இதில் சாரா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here