தோக்கியோ: ஒரே சமயத்தில் சளிக்காய்ச்சல் சம்பவங்களும் கொவிட்-19 கொள்ளைநோய்ச் சம்பவங்களும் ஜப்பானில் அதிகரித்துவருவதாக அந்நாட்டின் அதிகாரபூர்வ தரவுகள் தெரிவித்துள்ளன.
குளிர்காலத்தின்போது வெப்பநிலை இன்னும் குறையக்கூடும் என்ற நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.புதிதாகப் பதிவான சளிக்காய்ச்சல் சம்பவங்கள் டிசம்பர் 8ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 44,673 என்றிருந்தது. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 20,000 சம்பவங்கள் அதிகமாகும். இந்நிலையில், ஜப்பானில் மொத்தம் 347,000 பேர் சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.
கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 15,163 ஆக இருந்தது. இது முந்தைய ஏழு நாள் காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 3,200 அதிகமாகும். தொடர்ந்து இரண்டாவது வாரமாக புதிதாகப் பதிவான சம்பவங்களில் அதிகரிப்பு தென்பட்டது. இதற்கிடையே, கொவிட்-19 கிருமித்தொற்றுடன் மருத்துவமனையில் புதிதாகச் சேர்க்கப்பட்ட நோயாளிகள் 1,600க்கும் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
இருமும்போது வாயை அல்லது மூக்கை மெல்லிழைத்தாளால் மூடிக்கொள்ளுதல், தமது சொந்த முழங்கையில் இருமுதல் அல்லது தும்முதல் என இருமலுக்கென்ற ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்குமாறு சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற அடிப்படை முன்னெச்சரிக்கை நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கூறியுள்ளது அமைச்சகம் .