அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி இந்திய மாணவி உயிரிழந்த வழக்கு – மேலும் ஒரு காவலர் பணிநீக்கம்

வாஷிங்டன்,அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரில், ஆந்திர பிரதேச மாநிலம் கர்னுால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜானவி கண்டூலா (வயது 23) என்ற மாணவி முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஜானவி கண்டூலா சாலையை கடக்கும்போது வேகமாக வந்த போலீஸ் ரோந்து வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அந்த வாகனத்தை கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரி ஓட்டினார். அவருடன் டேனியல் ஆடரெர் என்ற மற்றொரு போலீஸ் அதிகாரியும் இருந்தார். விபத்துக்கு பின் சியாட்டில் போலீஸ் சங்க தலைவரை தொலைபேசியில் அழைத்த அதிகாரி டேனியல் இது குறித்து அவரிடம் தகவல் தெரிவித்தார். அப்போது மாணவி குறித்தும் அந்த விபத்து குறித்தும் கேலியாக பேசி அவர் சிரித்துள்ளார்.

இந்த உரையாடல் போலீஸ் அதிகாரி டேனியலின் உடம்பில் இருந்த கேமராவில் பதிவான நிலையில், அந்த ‘ஆடியோ’ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விபத்து ஏற்படுத்தியது மட்டுமின்றி, கேலியாக பேசிய அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என இந்திய வம்சாவளி எம்.பி.,க்களும், அமெரிக்க வாழ் இந்தியர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து, இந்திய மாணவி விபத்தில் உயிரிழந்த பிறகு கேலி பேசிய போலீஸ் அதிகாரி டேனியல் ஆடரெர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து சியாட்டில் நகர காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், “டேனியல் ஆடரெரின் வார்த்தைகளால் ஜானவி கண்டூலாவின் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட மன உளைச்சலை யாராலும் அழிக்க முடியாது. அவர் தனது செயல்களால் காவல் பணிக்கு களங்கம் விளைவித்துள்ளார். எனவே டேனியல் ஆடரெர் சியாட்டில் நகர காவல்துறையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது மேலும் ஒரு காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விபத்து நடந்தபோது காவல்துறை வாகனத்தை ஓட்டிச் சென்ற கெவின் டேவ் என்ற காவலரை பணிநீக்கம் செய்து சியாட்டில் நகர இடைக்கால காவல்துறைத் தலைவர் ஸ்யூ ராஹர் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் நடந்தபோது ஒரு அவசர உதவி அழைப்பை விசாரிப்பதற்காக காவல்துறை வாகனத்தை கெவின் டேவ் சுமார் 119 கி.மீ. வேகத்தில் ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது அந்த கார் இந்திய மாணவி ஜானவி கண்டூலா மீது மோதியதில் அவர் சுமார் 100 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்து சம்பவத்தில் காவலர் கெவின் டேவ், சியாட்டில் காவல்துறையின் சில விதிகளை மீறியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்காக சென்ற அவரது செயலின் நோக்கம் நேர்மையானதாக இருந்தாலும், இந்த விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு ஈடு செய்ய முடியாதது என சியாட்டில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here