இந்தியா புவனேஸ்வரில் நடைபெற்ற 18ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் மலேசியா-இந்தியா டிஜிட்டல் கவுன்சில்(மன்றம்) – (MIDC) அதிகாரப்பூர்வ தொடக்கம் கண்டது. நமது நாட்டின் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு இடையேயான அதிகாரப்பூர்வ சந்திப்பைத் தொடர்ந்து இந்தத் திட்டம் தொடக்கம் கண்டது.
அமையப்பெற்றிருக்கும் MIDC மன்றமானது டிஜிட்டல்வர்த்தகம், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் துறைசார் வல்லுனர்களின் பரிமாற்றம் என, இருநாட்டு இலக்கவியல் துறையை இயக்கத் தயாராக உள்ளது என அமைச்சர் தெரிவித்தார். இந்த முக்கிய முயற்சி மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவில் குறிப்பிடத்தக்க முனேற்றத்தைப் பிரதிபலிக்கிறது. பண்பாட்டு கலாச்சார விழுமியங்களை வலுப்படுத்தும் அதே நேரத்தில், இரு நாடுகளின் இலக்கவியல் புத்தாக்கம், துறைசார் திறன் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை இம்மன்றம் மேலும் விரிவுபடுத்துகிறது என தமதறிக்கையில் அமைச்சர் கோபிந்த் பதிவு செய்தார்.
இரு நாட்டுக்கும் இடையேயான இலக்கவியல் வளர்ச்சி,திறன் மேம்பாடு, இலக்கவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு வலுவூட்டும் முக்கியத் தளமாக MIDCமன்றம் விளங்கும் அதே வேளை, இதனைச் செயல்படுத்துவதற்கான சூழலை இலக்கவியல் அமைச்சு ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தும் என கோபிந் சிங்தெரிவித்தார். MIDC எனப்படும் மலேசியா இந்தியா இலக்கவியல் மன்றம் கீழ்கண்டவாறு செயல்படும்:
அதோடு இந்த மன்றம், இரு நாடுகளுக்கும் இடையே கணினி அவசரகால பதிலளிப்பு குழுக்களுக்கு-(Computer Emergency Response Teams CERTs) இணைய பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும். அதே வேளை 5G தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டங்களில் ஒத்துழைக்கவும், 5G தொழில்நுட்பம் தொடர்பான வாய்ப்புகளை ஆராயவும் இந்த மன்றம் செயல்படும்.
MIDC–யின் தொடக்க கூட்டம் இந்த ஆண்டின் முதல் பாதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், 2024–ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவிற்கு அலுவல் பயணம் போது மேற்கொண்ட போது கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடைப்படையாகும். அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) கீழ் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை வலுப்படுத்தும் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களுக்கான அடித்தளத்தை MIDC முன்னெடுக்கும்.
இந்தியாவில் தனது அதிகாரப்பூர்வ பயணத்தின் போது, அமைச்சர் கோபிந்த் சிங், இந்திய வெளியுறவு விவகாரங்களுக்கான அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் Digital India Foundation மற்றும் Open Network for Digital Commerce (ONDC) ஆகியவற்றின் பிரதிநிதிகளைச்சந்தித்தார். பயனீட்டாளர்கள், தளங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களை இணைக்கும் திறந்த மின் வாணிக வலையமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த Digital India Foundation மற்றும் Open Network for Digital Commerce (ONDC) இந்தியாவில் செயல்படுகிறது. இது இந்திய அரசின் ஒரு விவேக முயற்சியாகும் என அமைச்சர் பாராட்டினார்.
இது ஓர் அறிவுசார் பயணம் ஆகும். மேலும் எதிர்காலத்தை நோக்கி, குறிப்பாக இலக்கவியல் துறையில், இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த தகுந்த முயற்சிகளை தமதமைச்சு மேற்கொள்ளும் என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த இந்திய பயணம் இரு நாடுகளுக்குமிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தி புத்தாக்கம் மற்றும் பொருளாதார வளத்தை உருவாக்கும் எதிர்கால ஒத்துழைப்புகளுக்கான திடமான அடித்தளத்தை அமைத்துள்ளது என அமைச்சர் கோபிந்த் கூறினார்.
கடந்த ஆகஸ்டில் பிரதமர் அன்வாருடன் சென்றபோது, கோபிந்த் இந்தியாவின் பல முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தார். அவை மலேசியர்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் 5,000 உயர்தர தொழில்நுட்ப திறன் வேலை வாய்ப்புகளை உருவாக்க உறுதி கொண்டுள்ளன. இந்தியாவின் 17 தொழில்நுட்ப நிறுவனங்களின் கருத்திணக்க உறுதிமொழி மூலம் 2024ஆம் ஆண்டில் 1,943 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இதுவரை, இந்திய வம்சாவளியினைச் சேர்ந்த 214 நிறுவனங்களுக்கு மலேசியா டிஜிட்டல் (Malaysia Digital status) நிலை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை, 70% க்கும் மேற்பட்ட மலேசிய ஊழியர்களை நியமிக்க உறுதியளித்துள்ளன என அமைச்சர் தெரிவித்தார். 18ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை, நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். இந்த நிகழ்வு இந்தியாவின் வளர்ச்சிக்காக வெளிநாட்டிலுள்ள இந்திய சமூகத்தின் பங்களிப்பை அங்கீகரிக்கிறது. இந்த ஆண்டின் நிகழ்வில், 50க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து இந்திய வம்சாவளியினர் பங்கேற்றனர்.