கோலாலம்பூர்:
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2 (KLIA2) இல் விமானம் புறப்படுவதற்கு முன் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஆக்ரோஷமாக நடந்துகொண்ட சீன தம்பதியினர் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
நேற்று முன்தினம் (பிப்ரவரி 9) விமானம் சீனாவின் ஜியாங்கிற்கு புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தபோது, ஒரு பெண் பயணி குழப்பத்தை ஏற்படுத்தத் தொடங்கியதாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய காவல்துறைத் தலைமை அதிகாரி அஸ்மான் ஷரியத் கூறினார்.
“பெண் பயணி ஒருவர் மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ‘பைத்தியக்காரத்தனமாகவும்’, ஆக்ரோஷமாகவும் நடந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணும், அவரது ஆண் நண்பரும் பாதுகாப்பு அதிகாரிகளால் விமானத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர், ”என்று அவர் நேற்று (பிப்ரவரி 10) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தம்பதியினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து ஆக்ரோஷமாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவர்களின் நடத்தை காரணமாக, காவல்துறை சுகாதார அமைச்சக அதிகாரிகளின் உதவியை நாடியதாகவும், அவர்கள் விரைந்து மயக்கமருந்து கொடுத்து அவ்விருவரையும் கட்டுப்படுத்தினர்.
“அவர்களின் உளவியல் நிலையைப் பரிசோதிக்க செர்டாங்கில் உள்ள சுல்தான் இத்ரிஸ் ஷா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்த ஜோடிக்கு அடிப்படை மனநலப் பிரச்சினைகள் இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர், இருப்பினும் அவர்கள் இருவரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.