பாகிஸ்தான் பொருட்கள் விற்பனை – இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

காஷ்மீர் மாநிலம் சுற்றுலா தலமான பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா நடத்தியது. இதனை தொடர்ந்து அத்துமீறிய பாகிஸ்தான், இந்திய எல்லைப்பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. இதையடுத்து இருநாடுகளுக்கும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.

இதையடுத்து, உலக நாடுகள் கேட்டுக்கொண்டதுக்கிணங்க தாக்குதலை நிறுத்திக்கொள்வதாக இருநாடுகளும் தெரிவித்தனர். இதனிடையே, பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்துநதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொடரும் என இந்தியா அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் கொடிகள் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட பல இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

Ubuy இந்தியா, Etsy, The Flag Company மற்றும் The Flag Corporation ஆகியவற்றுக்கும் அனுப்பப்பட்ட நோட்டீசில், பாகிஸ்தான் கொடிகள் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை விற்பனை செய்வது பொறுத்துக்கொள்ளப்படாது என்று ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், அத்தகைய பொருட்களை தங்கள் தளங்களில் இருந்து அகற்றுமாறு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

இருப்பினும், அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட பல இ-காமர்ஸ் நிறுவனங்கள் நோட்டீசுக்கு தற்போதுவரை எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here