கோலாலம்பூர், மே 22-
கோலாலம்பூரிலும் புத்ராஜெயாவிலும் நடைபெறவுள்ள 46வது ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு, மே 23 முதல் 27 வரை, ரேபிட் கே.எல். பயணச் சேவையின் இயங்கு நேரம் அதிகரிக்கப்படுகிறது.
மேலும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கான ரயில்களின் போக்குவரத்து சேவைகளும் அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மாநாட்டு காலத்தில் அதிகாரப்பூர்வ பேராளர்களின் பயணத்தை எளிதாக்கவும், பயணிகளின் இயக்கத்தைச் சீராக வைத்திருக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேலை நாட்களில் பரபரப்பான பயண நேரங்களில், வழக்கத்தை விட ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படும் என பிரசாரணா மலேசியா பெர்ஹாட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
காலை 6.30 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 8.00 மணி வரை புதிய பரபரப்பான பயண நேரம் அமையும். வழக்கமாக இது காலை 7.00 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
மே 25, 26 ஆகிய வார இறுதி நாட்களில், பயணிகளின் எண்ணிக்கை கூடுதலாக அதிகரிக்கும் என்பதால், ரயில்களின் பயண நேர இடைவெளி மேலும் குறைக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் நடவடிக்கையாக, முக்கியமான சில நிலையங்களில் பயணிகளின் பயணங்கள் சுமூகமாக இருப்பதை உறுதிச் செய்ய 400 ஆதரவு பணியாளர்கள் பணியமர்த்தப்படுவர்.
சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும் நடவடிக்கைகளால் தாமதங்களாகக் கூடும். சில பஸ்கள் ரேப்பிட் கே.எல். ஆன்டிமாண்ட் சேவைகள் தாமதமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
தாமதம் ஏற்படக்கூடிய பாதைகள்:
பாதை 402 (எல்ஆர்டி தித்திவங்ஸா – எல்ஆர்டி மலூரி)
பாதை 302 (எல்ஆர்டி தித்திவங்ஸா – கே.எல்.சி.சி)
பாதை 300 (பாண்டான் இண்டா ஹப் – லெபோ அம்பாங்)
பாதை 303 (தாமான் முலியா ஜெயா – லெபோ அம்பாங்)
ரேபிட் கே.எல். ஆன்டிமாண்ட் (தித்திவங்ஸா மண்டலம் – சௌவ்கிட்)
இந்தக் காலகட்டத்தில் பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றும், அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள ஊடகங்கள், PULSE செயலியின் மூலம் உடனடி தகவல்களை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் ரேபிட் கே.எல்.பரிந்துரைக்கிறது.
அத்துடன், மக்கள் அதிக அளவில் பொது போக்குவரத்தை பயன்படுத்தி மாநகரில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் போது போக்குவரத்து சீராக நடைபெற உதவ வேண்டும், எனவும் அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.