நைஜீரியா: கனமழை, வெள்ளத்திற்கு 700 பேர் பலி?

அபுஜா,நைஜீரியா நாட்டில் பருவகாலங்களில் மழை, வெள்ளம் என்பது புதிதல்ல. இதில், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவது மட்டுமின்றி, அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் வெள்ளம் புரட்டி போட்டு விடுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக நைஜீரியா நாட்டின் வடக்கு மத்திய பகுதியில் நைஜர் மாகாணத்திற்கு உட்பட்ட மொக்வா நகரில் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் அபுஜா நகரில் இருந்து மேற்கே 380 கி.மீ. தொலைவில் உள்ள இந்த நகர், முக்கிய வர்த்தக மற்றும் போக்குவரத்து நகரங்களில் ஒன்றாக உள்ளது.

நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள விவசாயிகள் வெங்காயம், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் பிற உணவு பொருட்களை எடுத்து வந்து இந்த நகரில் விற்பனை செய்வார்கள். இவற்றை நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து வரும் வர்த்தகர்கள் வாங்கி செல்வார்கள். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நகர் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

வெள்ளத்தில் இருந்து தப்பிக்க, பல்லாயிரக்கணக்கானோர் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். தொடர் மழையால், பொதுமக்களின் இடுப்பு வரை வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. வெள்ளம் அதிகரித்து 500-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதனால், மக்களை மீட்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 2 சாலைகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு உள்ளன. 2 பாலங்கள் உடைந்துள்ளன. இதனை தொடர்ந்து ஜனாதிபதி போலா தினுபு, பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், நிவாரண பொருட்களையும், தற்காலிக புகலிடம் வழங்கும் உதவியையும் காலதாமதமின்றி உடனடியாக செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

எனினும், வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. பலர் காயமடைந்து உள்ளனர். 500-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இதுபற்றி உள்ளூர் அதிகாரி மூசா கிம்போகு செய்தியாளர்களிடம் கூறும்போது, மீட்பு முயற்சிகள் நிறுத்தப்பட்டு விட்டன. ஏனெனில் யாரும் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்லை என கூறினார். இதனால், மொத்தத்தில் 700 பேர் பலியாகி உள்ளனர் என அஞ்சப்படுகிறது.

இந்த பகுதியில், 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் வெள்ளம் ஏற்பட்டு நிலைமையை மோசமடைய செய்துள்ளது. அணை ஒன்று உடைந்து வெள்ள நீர் வெளியேறி வருகிறது என கூறப்படுகிறது. எனினும், அதிகாரிகள் இதனை உறுதி செய்யவில்லை.

நைஜீரியாவில், 2022-ம் ஆண்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், 600-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். ஆண்டுதோறும் இதுபோன்ற தொடர் கனமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் மக்கள் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here