இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மேம்பாட்டுக்காக மை ஜோப் கார்னிவல் 2025 – குமரேசன் ஆறுமுகம் .

News By S.Gunalan

சுங்கை டுவா, 

பல்வேறு துறைகளில் பட்டம் பெற்று வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் இளைஞர்கள், தொழிற்கல்வி முடித்தும் துறையில் வாய்ப்பு பெறாமல் இருப்பவர்கள், கல்வியை இடைநிறுத்திய இளைஞர்கள் ஆகியோருக்காக சிறந்த வேலை வாய்ப்புகளை உருவாக்குவது தான் தமது முக்கிய நோக்கம் என்று பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

பினாங்கு சுங்கை டுவா லோட்டஸ் பேரங்காடி வளாகத்தில் நடைபெற்ற மை ஜோப் கார்னிவல் 2025 வேலைவாய்ப்பு முகாமை பெர்கசோ (PERKESO) நிறுவனத்துடன் இணைந்து அவர் ஏற்பாடு செய்திருந்தார்.

அண்மைக்காலமாக ஏராளமான இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் வேலைவாய்ப்பு தொடர்பாக நேரடியாக அவரை அணுகி ஆலோசனை பெறுவது வழக்கமாகிவிட்டது. அந்த தேவைகளை கருத்தில் கொண்டு இந்த வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், இது பலருக்கும் பயன்படும் என அவர் குறிப்பிட்டார்.

பினாங்கு தீவிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தற்போது சுமார் 5,600 வேலைவாய்ப்புகள் காலியாக உள்ளன. இந்த வேலைவாய்ப்புகளை நிரப்ப 16 முன்னணி நிறுவனங்கள் முகாமில் பங்கேற்று, தகுதியானவர்களை நேரடியாக தேர்வு செய்வதற்காக கூடாரம் அமைத்துள்ளன. இதில் 1,500 இடங்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிறுவனங்களில் மே வங்கி, தங்கும் விடுதிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களும் அடங்குகின்றன. தொழிற்கல்வி மற்றும் திறன் பயிற்சி முடித்த இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்குடன் இந்த முகாமிற்கு திரண்டுள்ளனர்.

நாடு முழுவதும், குறிப்பாக பினாங்கு தீவில் பொருளாதார வளர்ச்சி வேகமாக முன்னேறி வரும் நிலையில், இளைஞர்கள் தங்களுடைய திறமைகளைப் பொருத்த வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கான இம்மாதிரியான வாய்ப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றதைக் காணும் போது பெருமிதமும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது என்றும் குமரேசன் கூறினார்.

மேலும், அண்மையில் பத்து உபான் தொகுதியில் தங்கள் வேலையை இழந்த 10 பேருக்கு பெர்கசோ நிறுவனத்தின் சார்பில் வாழ்வாதார நிதி உதவித் தொகைகள் வழங்கப்பட்டன. அவற்றை குமரேசன் நேரில் வழங்கினார். அவர்கள் இம்முகாமில் தங்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்புகளைத் தேர்வு செய்யும் பணியில் பெர்கசோ நிறுவனம் உதவிகரமாக செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here