தனது கணவரின் விவகாரங்களும் விசாரணைகளும் குறித்த ப்ளூம்பெர்க் கட்டுரை தொடர்பாக கடந்த ஆண்டு தாக்கல் செய்த காவல்துறை புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படாத குற்றச்சாட்டு குறித்து நைமா காலிட் சுயாதீன காவல் நடத்தை ஆணையத்தில் (IPCC) புகார் அளித்துள்ளார். பெட்டாலிங் ஜெயா காவல் நிலையத்தில் புகார் அளித்ததிலிருந்து ஒன்பது மாதங்களாக, வழக்குத் தொடர காவல்துறை தன்னைத் தொடர்பு கொள்ளவில்லை என்று அவர் கூறினார்.
எனக்குத் தெரிந்தவரை காவல்துறை எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. ஏனெனில் எந்த தொடர் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த அறிக்கைக்கான விசாரணை அதிகாரி யார் என்பது கூட எங்களுக்குத் தெரியாது என்று முன்னாள் நிதியமைச்சர் டைம் ஜைனுதீனின் மனைவி இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த செப்டம்பரில் ஒரு கட்டுரையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைவர் அஸாம் பாக்கி, டைம், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது, அவரது மகன்களை விசாரிக்க பிரதமர் அன்வார் இப்ராஹிமிடமிருந்து உத்தரவு வந்ததாக ஏஜென்சி அதிகாரிகளிடம் கூறியதாக ப்ளூம்பெர்க் வட்டாரங்களை மேற்கோள் காட்டியது. அந்தக் கட்டுரை குறித்து நைமா ஒரு புகாரினை தாக்கல் செய்தார். அதில் தனக்கும் டைம்க்கும் எதிரான குற்றச்சாட்டுகள் “அரசு அமலாக்க அமைப்புகளின் நிறுவனங்களை சீர்குலைப்பதன்” மூலம் அன்வாரின் அரசியல் எதிரிகளை குறிவைக்கும் ஒரு சதி என்று கூறப்பட்டிருந்தது.
கடந்த ஜனவரி மாதம் MACC-க்கு சொத்துக்களை அறிவிக்கத் தவறியதற்காக டைம் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஐந்து மாநிலங்களில் 19 நிலங்கள், ஆறு சொத்துக்கள், இரண்டு யூனிட் டிரஸ்ட் கணக்குகள், ஏழு சொகுசு வாகனங்கள் ஆகியவை அடங்கும். கடந்த ஆண்டு நவம்பர் 13 அன்று அவர் இறந்த பிறகு, அரசு தரப்பு குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்றது. மேலும் நீதிமன்றம் அவரை விடுவித்து விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது. பல்வேறு நிறுவனங்கள், கோலாலம்பூரிலும் பினாங்கிலும் உள்ள பல நிலங்கள், இரண்டு வாகனங்களில் தனது உரிமையை அறிவிக்கத் தவறியதாக நைமா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.















