13ஆவது மலேசியா திட்டத்தின் (13MP) வெற்றி, ஒவ்வொரு அரசு அமைச்சகம், நிறுவனத்தின் சரியான ஒருங்கிணைப்பு, தயார்நிலையைப் பொறுத்தது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
நிதியமைச்சருமான அவர் அனைத்து நிர்வாக இயந்திரங்களும் ஒரு தேசிய குழுவாக ஒற்றுமையுடன் நகர வேண்டும். யதார்த்தத்தில் வேரூன்றிய கொள்கைகளை உணர்ந்து எதிர்கால கோரிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறினார்.
கடந்த சில மாதங்களாக அமைச்சகங்கள், மத்திய நிறுவனங்கள் மற்றும் மாநில அரசாங்கங்களுக்கிடையேயான தொடர்ச்சியான விவாதங்களைத் தொடர்ந்து 13MP வரைவு செய்யப்பட்டது என்று திங்களன்று (ஜூன் 23) 13MP இன் கட்டமைப்பு, முக்கிய முயற்சிகளை மறுஆய்வு செய்வதற்கான சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய அன்வார் கூறினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான நாட்டின் வளர்ச்சியின் திசையை வடிவமைக்கும் முக்கியமான ஆவணம், அடுத்த மாத இறுதியில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக பிரதமர் கூறினார். கூட்டத்தின் போது, திட்டத்தை செயல்படுத்துவதை கூர்மைப்படுத்துவதற்கான முயற்சிகளில் யோசனைகள், பரிந்துரைகளை பங்களிக்க அனைத்து அமைச்சர்களுக்கும் மூத்த அமைச்சக நிர்வாகத்திற்கும் அவர் இடம் அளித்தார்.
பொருளாதார கட்டமைப்பை மறுசீரமைக்கவும், மக்களின் அந்தஸ்து, கண்ணியம் மற்றும் நல்வாழ்வை உயர்த்தவும், மேலும் நீதியான, நிலையான மற்றும் மீள்தன்மை கொண்ட தேசத்தை உருவாக்கவும் மதனி பொருளாதாரத்தின் அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக மதனி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக 13MP உள்ளது என்று அவர் கூறினார்.









