போபால்,மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் இருமல் மருந்து உட்கொண்டதில் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில், அலட்சியத்துடன் செயல்பட்ட குற்றச்சாட்டிற்கு ஆளான டாக்டர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டு உள்ளார். தமிழகத்தில் செயல்பட கூடிய, கோல்ட்ரிப் எனப்படும் இருமல் மருந்து உற்பத்தியில் ஈடுபட்டு வரும் மருந்து நிறுவனம் ஒன்றிற்கு எதிராக வழக்கு பதிவாகி உள்ளது.
Also Read
‘நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் எண்ணிக்கையில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது’ – நிர்மலா சீதாராமன்
இந்த விவகாரத்தில் 14 குழந்தைகள் பலியானது உறுதி செய்யப்பட்டபோது செய்தியாளர்களிடம் பேசிய சிந்த்வாராவின் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் திரேந்திரா சிங், இழப்பீடுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட நபர்களுடைய கணக்கிற்கு பணம் சென்று விட்டது என சமீபத்தில் கூறினார். இந்த நிலையில், உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்து உள்ளது.
ஜுன்னார்தியோ பகுதியை சேர்ந்த ஜெய் உஷா யதுவன்ஷி (வயது 2) என்ற குழந்தை நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது. நேற்றிரவு தணி திஹாரியா என்ற இரண்டரை வயது குழந்தை நாக்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதுதவிர 6 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 5 குழந்தைகளின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. சிந்த்வாராவில் சிகிச்சை பெற்று வந்த 2 குழந்தைகள் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்து உள்ளது.












