சண்டிகர்,பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் மாவட்டத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டப்படுவதாக மாநில உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது, மஹ்தீப் சிங் (வயது 18), ஆதித்யா (வயது 19) ஆகிய இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து ராக்கெட் ராஞ்சர் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து இருவரிடமும் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
இரு இளைஞர்களும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பில் இருந்துள்ளனர். மேலும், பணத்திற்காக அம்ரித்சரில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி, பாகிஸ்தானின் இருந்து டிரோன் மூலம் ராக்கெட் லாஞ்சரை இருவரும் பெற்றுள்ளனர். பஞ்சாப்பில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டு பெரோஷ்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.