லக்னோ,243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ‘மகாகத்பந்தன்’ கூட்டணி ஆகிய 2 கூட்டணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம், ஜன்சக்தி கட்சி(ராம்விலாஸ்) உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதே போல் ‘ மகாகத்பந்தன்’ கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சியினர் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சஹஸ்ரா மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“பிரதமர் தேவையற்ற விஷயங்கள் குறித்து பேசுகிறார், ஆனால் பீகாரில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஊழல் மற்றும் தவறான ஆட்சி பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. தேர்தல்களின்போது பீகாருக்கான நன்கொடைகளை அறிவிப்பதற்கு முன், மோடியும், அமித்ஷாவும் கடந்த 20 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணி பீகார் மாநிலத்திற்கு என்ன செய்தது என்பதற்கு முதலில் கூற வேண்டும்.
முதல்-மந்திர் நிதிஷ் குமார் மாநில அரசை நடத்தவில்லை, அதற்கு பதிலாக, பிரதமர் மற்றும் பிற மத்திய தலைவர்களால் புதுடெல்லியில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் பீகாரில் ஆட்சி நடத்தப்படுகிறது. பீகாரில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மக்களின் வாக்குரிமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
வேலைவாய்ப்புகள் இல்லாததால் இளைஞர்கள் பீகார் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதே நேரத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் பா.ஜ.க.வின் கார்ப்பரேட் நண்பர்களுக்கு வழங்கப்படுகின்றன.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












