பகாங், சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை சற்று அதிகரித்தது. அதே நேரத்தில் ஜோகூரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பகாங்கில், ரவூப் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை 74 பேருடன் ஒப்பிடும்போது இன்று காலை 83 பேராக அதிகரித்துள்ளது.
சமூக நலத்துறையின் இன்போபென்கானா போர்ட்டலின்படி, பாதிக்கப்பட்ட அனைவரும் உலு அடோக் இடைநிலைப் பள்ளியில் உள்ள வெள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், பகாங் முழுவதும் உள்ள முக்கிய நதி நிலையங்களில் நீர் மட்ட அளவீடுகள் இன்னும் அபாய அளவை விடக் குறைவாக இருப்பதாக நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (DID) வலைத்தளம் காட்டுகிறது.
சரவாக்கில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 7 மணி நிலவரப்படி 1,343 பேராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 1,320 பேர் மட்டுமே இருந்தனர். ஜோகூரில், நேற்று 134 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் 112 பேர் இன்னும் நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் ஜோகூர் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவர் அஸ்மான் ஷா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.









