“தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்” – ஜனநாயகன் பட விவகாரத்தில் விஜய்க்கு ராகுல் காந்தி ஆதரவு

புதுடெல்லி,நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் கடந்த 5-ந் தேதி பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரோடக்‌ஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை கடந்த 6 மற்றும் 7-ந்தேதி விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா கடந்த 9 ஆம் தேதி தீர்ப்பளித்தார். அதில், ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்கிறேன். இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனடியாக வழங்கவேண்டும்” என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு பிறப்பித்த அடுத்த சில நிமிடங்களில், தணிக்கை வாரியம் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்தது. இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதால், ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 21 ஆம் தேதிக்கு ஐகோர்ட்டு ஒத்திவைத்துள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் மேல் முறையிடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில், விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஜனநாயகன் பட விவகாரத்தில் விஜய்க்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

‘ஜன நாயகன்’ திரைப்படத்தை தடுக்க மத்திய அரசு மேற்கொண்ட முயற்சி தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதலாகும். தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டீர்கள் மிஸ்டர் மோடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here