வங்காள தேச தேர்தலில் வெற்றி: தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி,வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சி செய்தநிலையில் வங்காளதேச விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட ராணுவ வீரர்களின் உறவினர்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கடந்த 2024-ம் ஆண்டு நாடு முழுவதும் மாணவர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வன்முறையாக மாறிய இந்த போராட்டத்தில் மாணவர்கள், ராணுவ வீரர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். நோபல் பரிசு பெற்ற பொருளியலாளர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைந்தது. பிப்ரவரி 12-ந்தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள், கடந்த ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. முன்னதாக ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரகுமான் வங்காளதேச தேசிய கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக 17 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தார்.

அவரை எதிர்த்து முன்னர் அவர்களுடைய கூட்டணியில் இருந்த ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி. கூட்டணி கட்சிகளுடன்  இணைந்து போட்டியிடுவதாக அறிவித்தது. 11 கட்சிகள் அடங்கிய இந்த கூட்டணியில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராடிய மாணவர் அமைப்பினரும் அடங்குவார்கள்.

இந்த நிலையில் வங்காளதேசத்தில் 299 இடங்களுக்கான 13-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று எவ்வித இடையூறும் இல்லாமல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்ததால் அங்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

காலை 7.30 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4.30 மணிவரை நடந்தது. தேர்தலை யொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 10 லட்சம் பாதுகாப்புப்படையினர் 42,779 வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

வங்காளதேச இடைக்கால அதிபர் முகமது யூனுஸ், வங்காளதேச கட்சி தலைவர் மற்றும் பிரதமர் வேட்பாளர் தாரிக் ரகுமான், ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைவர் ஷபிகுர் ரகுமான் உள்ளிட்ட தலைவர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.

இந்த தேர்தலில் பெண் வாக்காளர் தங்களுடைய வாக்குகளை செலுத்த ஆர்வம் காட்டினர். குறிப்பாக சந்த்பூர் மாவட்டம் தெற்கு ரப்சா தொகுதியில் உள்ள பெண் வாக்காளர்கள் சுதந் திரத்துக்கு பிறகு முதன்முறையாக வாக்குச்சாவடிகளுக்கு வந்து ஓட்டுப்போட்டனர்.

மதியம் 2 மணிவரையிலான நிலவரப்படி மொத்தம் 47.91 சதவீதம் அளவில் வாக்குப்பதிவானது. தொடர்ந்து மாலை 4.30 மணியுடன் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வாக்குச்சீட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக தொடங்கியது. அரசு அதிகாரிகள், அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வாக்கு பெட்டிகளில் பதிவான ஒட்டுகளை எண்ணத் தொடங்கினர்.

இந்தநிலையில், மொத்தமுள்ள 299 தொகுதிகளில் பிஎன்பி கட்சி 212 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

இந்த நிலையில், வங்காள தேசத்தில் புதிதாக அமையவுள்ள அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வங்காள தேச பொதுத் தேர்தலில், வங்காள தேச தேசியவாதக் கட்சியைத் தீர்க்கமான வெற்றிக்கு அழைத்துச் சென்ற தாரிக் ரஹ்மானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த வெற்றியானது, வங்கதேச மக்கள் உங்கள் தலைமை மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. ஜனநாயகம், முற்போக்கு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வங்கதேசத்துக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும். நமது பன்முக உறவுகளை வலுப்படுத்தவும், நமது பொதுவான வளர்ச்சி இலக்குகளை அடையவும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன் என அதில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here