இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலேசிய வருகையின் போது நிகழ்த்தப்பட்ட பிரம்மாண்ட ‘சுவாகதம்’ நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்களைக் கௌரவிக்கும் பாராட்டு விழா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையத்தில் (NSCBICC) மிகச் சிறப்பாக நடைபெற்றது. கடந்த பிப்ரவரி 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டார். இதனை முன்னிட்டு ‘மைன்ஸ்’ (MINES) அனைத்துலக கண்காட்சி மையத்தில் “செலாமாட் டத்தாங் மோடிஜி” எனும் சிறப்பு இந்திய சமூக நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இணைந்து பங்கேற்ற இந்நிகழ்வு, இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை பறைசாற்றுவதாக அமைந்தது. இந்த நிகழ்வின் முக்கிய அங்கமாக, NSCBICC ஒருங்கிணைப்பில் ‘சுவாகதம்’ எனும் பிரம்மாண்ட வரவேற்பு நடனம் நடைபெற்றது. மலேசியாவின் 46 நடனப் பள்ளிகள், சமூக அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 800 கலைஞர்கள் இதில் பங்கேற்றனர்.
இவர்களின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்படைப்பு, “அதிக எண்ணிக்கையிலான கலைஞர்கள் பங்கேற்ற பாரம்பரிய இந்திய நடனம்” என ‘மலேசிய சாதனைப் புத்தகத்தில்’ அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த கலைஞர்களையும், கடந்த ஜனவரி 27-ஆம் தேதி நடைபெற்ற இந்திய தேசிய தின வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கலை நிறுவனங்களின் தலைவர்களையும் பாராட்டும் விதமாக பிப்ரவரி 27, மாலை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையத்தில் பல்நோக்கு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் மலேசியாவிற்கான இந்தியத் தூதர் பி.என். ரெட்டி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். மலேசியக் கலைத்துறையினரின் ஒற்றுமை, கட்டுப்பாடு, அர்ப்பணிப்பை அவர் தனது உரையில் வெகுவாகப் பாராட்டினார். இந்த விழாவில் மலேசிய நுண்கலாலயம் (டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்) (TFA) தலைவர் தில்லை ராஜ், சூத்ரா அறக்கட்டளைத் தலைவர் பத்மஸ்ரீ டத்தோ ரம்லி இப்ராகிம், MI கலாச்சார நிகழ்வுகளின் இயக்குனர் டத்தோ நபேஷ் கண்ணா உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும் கலை அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
ராமேஸ்வரி ராஜா
எஸ். சண்முகம்











