தெலுக் பங்லிமா காராங்கில் பயங்கர மோதல்: கத்தியுடன் சுற்றிய நபர் உட்பட மூவர் கைது!

கோலா லங்காட் | மார்ச் 24, 2026

தெலுக் பங்லிமா காராங், ஜாலான் வாஜா (Jalan Waja) பகுதியில் பொது இடத்தில் ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டதாக மூன்று சந்தேக நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை (மார்ச் 23) இரவு, வீட்டின் வெளியே பயங்கர சத்தம் கேட்டுப் பார்த்த ஒருவர் இது குறித்துப் போலீசாருக்குத் தகவல் அளித்தார்.

தகவலளித்தவரின் மாமா கையில் நீண்ட கத்தியை (Machete) வைத்திருப்பதையும், அடையாளம் தெரியாத கும்பல் அவரைச் சூழ்ந்து கொண்டு தாக்க முயல்வதையும் அவர் நேரில் பார்த்துள்ளார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே அங்கிருந்த கும்பல் தப்பியோடியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஒருவர் கத்தியுடனும், மற்ற மூவர் மரக்கட்டைகள் மற்றும் பிற ஆயுதங்களுடனும் மோதுவது பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் 39 முதல் 45 வயதுக்குட்பட்ட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், இதில் புகார் அளித்தவரின் மாமாவும் அடங்குவார் என்றும் கோலா லங்காட் மாவட்டத் துணை போலீஸ் தலைவர் டிஎஸ்பி முகமட் சுஃபியான் அமின் (DSP Mohd Sufian Amin)தெரிவித்துள்ளார்.

மோதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் இதர ஆயுதங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சாலையில் ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதமே இந்த வன்முறைக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தற்போது இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 148 (ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபடுதல்) கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here