போக்குவரத்து முன்னாள் அமைச்சர் துன் லிங் லியோங் சிக் மறைவு

மசீச முன்னாள் தேசியத் தலைவரும் போக்குவரத்து முன்னா அமைச்சருமான துன் டாக்டர் லிங் லியோங் சிக் நேற்றுக் காலமானார். அவருக்கு வயது 82. அவர் காலமானதை மசீச தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் நேற்று உறுதி செய்தார். லிங் லியோங் சிக், கோலகங்சார் பேராக்கில் பிறந்தவர். மலேசிய அரசியலில் முக்கியமான தலைவர்களுள் திகழ்ந்தவர். குறிப்பாக மசீசவிலும் பாரிசான் நேஷனலிலும் இட்டத்தப்ட 20 ஆண்டுகளுக்கு மேல் இவர் பணிபுரிந்துள்ளார்.

1986ஆம் ஆண்டு மசீச தேசியத் தலைவராகப் பொறுப்பு வகித்த லிங், 2003ஆம் ஆண்டு வரை அப்பதவியில் நீடித்தார். இந்தக் காலகட்டத்தில் அவர் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக அவர் போக்குவரத்து அமைச்சராகப் பணிபுரிந்தார். இதற்கு முன் அவர் தகவல்துறை துணை அமைச்சராகவும் நிதி துணை அமைச்சராகவும் கல்வி துணை அமைச்சராகவும் இருந்திருக்கிறார். 1943ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி கோல கங்சாரில் பிறந்து வளர்ந்த இவர் தைப்பிங், கிங் எட்வர்ட் VII ஸ்கூலில் தொடக்கக்கல்வி கற்றார். பின்னர் சுங்கைபீசியில் உள்ள அரச ராணுவக் கல்லூரியில் மேற்கல்வி கற்றார்.

1966ஆம் ஆண்டு சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் இருந்து எம்பிபிஎஸ் மருத்துவர் பட்டம் பெற்றார். தொடக்கத்தில் பினாங்கில் உள்ள பெரிய மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றிய அவர் 1968இல் மசீசவில் இணைந்து அரசியலில் தீவிரம் காட்டினார். ஓங் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். லிங் 1974 தொடங்கி 1982 வரை மாத்தா கூச்சிங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.

பின்னர் 1986 தொடங்கி 1999 வரை நான்கு தவணைகள் லாபிஸ் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். நாட்டின் பிரதான நுழைவாயிலாக கேஎல்ஐஏ எனப்படும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் திட்டப் பணிக்கு இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார். கல்வித்துறையில் ஆற்றிய சேவைக்காக இவர் துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழக வேந்தராகவும் துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரி தலைவராகவும் நியமனம் பெற்றார். 2004ஆம் ஆண்டில் இவருக்கு எஸ்எஸ்எம் எனப்படும் டர்ஜா ஸ்ரீ செத்தியா மாக்கோத்தா எனும் துன் விருது வழங்கப்பட்டது.

எம்.எஸ்.மலையாண்டி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here