ஷா ஆலம்,
கோலலங்காட் மாவட்டத்திலுள்ள பள்ளி ஒன்றில் மாணவர்கள் உணவு நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்ட சம்பவத்திற்கு, உறைய வைக்கப்பட்ட கோழி இறைச்சியை முறையாகப் பனிநீக்கம் செய்யாமல் தயாரிக்கப்பட்ட ‘அயாம் கெப்புக்’ (Ayam Gepuk) உணவே காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மாணவர் விவகாரங்களுக்கான மூத்த துணைத் தலைமையாசிரியரின் துரித நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட 11 மாணவர்களுக்கும் உடனடியாகச் சிகிச்சையும் மருந்துகளும் வழங்கப்பட்டதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை விரிவான விசாரணையை மேற்கொள்வதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட பள்ளியின் சிற்றுண்டிச்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதுவரை இச்சம்பவம் சம்பந்தப்பட்ட பள்ளியில் மட்டுமே நிகழ்ந்துள்ளதுடன், இதர பள்ளிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறையின் ஒத்துழைப்புடன் மாநிலத்திலுள்ள பள்ளிச் சிற்றுண்டிச்சாலைகளில் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமிருடின் தெரிவித்தார்.
மாணவர்களின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் உறுதிசெய்யும் வகையில், உணவு தயாரிப்புப் பணிகள் நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) ஏற்ப மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்தவே இச்சோதனைகள் நடத்தப்படும் என்றார் அவர்.























