2026-27 நிதியாண்டில், இந்தியாவின் ஜி.டி.பி. 7-7.4 சதவீதம் ஆக இருக்கும்; நிதியமைச்சகம் கணிப்பு

புதுடெல்லி அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரானை தாக்கி வருகிறது. இதனால், மேற்காசியாவில் நிச்சயமற்ற நிலை காணப்படுகிறது. இந்த நிலையில், நடப்பு 2026-27 நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (ஜி.டி.பி.) 7-7.4 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

நிதியமைச்சகம் வெளியிட்ட பொருளாதார மறுஆய்வு தகவலின்படி, கடந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதம் என்ற அளவில் இருந்தது. சமீபத்திய ஆண்டுகளில் ஒப்பீட்டளவில் இது மிக சிறந்த செயல்பாடாக பார்க்கப்படுகிறது.

எனினும், 2026-27 நிதியாண்டில், இது 7 முதல் 7.4 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என தெரிவிக்கின்றது. இந்த சரிவுக்கான காரணிகளாக, வலுவான உள்நாட்டு அடிப்படை விசயங்கள் அனைத்தும் வெளிநாட்டு சவால்களால் கடுமையான தாக்கங்களை எதிர்கொண்டு வருகிறது என அறிக்கை சுட்டி காட்டுகிறது.

ஆனால், வலுவான உள்நாட்டு தேவை, கொள்கையளவிலான ஆதரவு, நிலையானதொரு நிதி நடைமுறை மற்றும் நீடித்த பொது முதலீடு ஆகியவற்றால் இந்தியா மீட்சியடைந்து நிலைமையை தக்க வைத்துள்ளது என்றும் அறிக்கை சுட்டி காட்டுகிறது.

எனினும், எல் நினோ போன்ற பருவநிலை தொடர்பான பாதிப்புகளும் ஏற்பட கூடும் என அமைச்சகம் எச்சரித்து உள்ளது. இதனால், அதிக மழைப்பொழிவு கிடைக்க கூடிய பல்வேறு மாவட்டங்களில் இயல்புக்கு குறைவான அளவே மழை பெய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, பணவீக்கம் அதிகரிப்புக்கான நெருக்கடிகளுடன் கூட, வேளாண் விளை பொருட்களில் பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியமும் உள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here