முஸ்லீம் லீக் மற்றும் மலேசிய இந்திய முஸ்லிம் தேசிய பேரவை பெர்மிமின் நிர்வாகக் குழுவின் பிரதிநிதிகள், அதன் தலைவர்ககள் டத்தோ ஸ்ரீ ஹாஜா நஜ்முதீன் மற்றும் முஹம்மது அஸ்மான் ஷாஹ் தலைமையில், மரியாதைக்குரிய அமைச்சர் ஸ்டீவன் சிம் அவர்களை அமைச்சரின் அலுவலகத்தில் சமீபத்தில் சந்தித்து, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விரிவான கலந்துரையாடல் நடத்தினர். இந்த சந்திப்பில், முஸ்லிம் லீக் துணைத் தலைவர் டத்தோ (டாக்டர்) ஷாஹுல் ஹமீத், உதவி தலைவர் டத்தோ மீரா, பொது செயலாளர் நூர் முகமது, ஈசான் மூடா தலைவர் அர்ஷாட், பெர்மிம் துணைத் தலைவர் டாக்டர் நிஜாம் ஷா, மற்றும் முஸ்லிம் லீக் இளைஞர் தலைவர் மற்றும் பெர்மிம் செயற்குழு உறுப்பினர் ஜமில் காதர் கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலின் முக்கிய அம்சங்கள் :
சமூக பொருளாதார வலுப்படுத்தல் – இந்திய முஸ்லிம் சமூகத்தின் வணிகம் மற்றும் தொழில்முனைவு துறைகளில் பொருளாதார எதிர்காலத்தை வலுப்படுத்தும் உத்திகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. சமூக பொருளாதார மேம்பாடு – சமூக நலன் மற்றும் தேசிய பொருளாதார சங்கிலியில் சமூகத்தின் பங்கேற்பு குறித்து பேசப்பட்டது. அரசுக் கொள்கைகள் & உலகளாவிய சவால்கள் – தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்ள அரசின் கொள்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அமைச்சர் ஸ்டீவன் சிம் அவர்கள் ஆராய்ந்து, இந்திய முஸ்லிம் சமூகத்தின் ஒருங்கிணைந்த, உள்ளடக்கிய மற்றும் பயனுள்ள வளர்ச்சியை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்ததாக முஸ்லீம் லீக் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹாஜா நஜ்முதீன் கூறினார்









