ஜனநாயகத்தில் புதிய மைல்கல்: பிரதமர் பதவிக்கு 10 ஆண்டுகள் வரம்பு – ஜூன் மாதம் மீண்டும் சட்டத் திருத்தம் தாக்கல்!

கோலாலம்பூர்:

லேசிய அரசியலில் அதிகாரக் குவிப்பைத் தடுத்து, உண்மையான அதிகாரப் பகிர்வை உறுதி செய்யும் நோக்கில், பிரதமர் பதவிக் காலத்தை அதிகப்படியாக 10 ஆண்டுகளாக (இரண்டு தவணைகள்) கட்டுப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத் திருத்தம் குறித்து அமைச்சர் டத்தோ ஸ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பதவி கால வரம்பு என்பது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ‘நிறுவனச் சீர்திருத்தக் கொள்கையின்’ (Institutional Reform) மிக முக்கியமான அங்கமாகும். இது நாட்டின் ஜனநாயக மாண்புகளை வலுப்படுத்தும் ஒரு முன்னுதாரண நடவடிக்கை என அஸாலினா குறிப்பிட்டார்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற வாக்கெடுப்பில், வெறும் இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் இந்தத் திருத்தம் நிறைவேறாமல் போனது. இருப்பினும், நாட்டின் நலன் கருதி வரும் ஜூன் மாதம் இச்சட்டமூலம் மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

அரசியல் கடந்த ஆதரவு: “இது ஒரு தனிநபருக்கானது அல்ல, மாறாக நாட்டின் ஜனநாயக முறை வளர்ச்சிக்கானது” என்று குறிப்பிட்ட அஸாலினா, கட்சிப் பாகுபாடின்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

ஒரே நபர் நீண்ட காலம் அதிகாரத்தில் நீடிப்பதைத் தவிர்ப்பதன் மூலம், புதிய தலைமைத்துவங்களுக்கு வழிவகுக்கவும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் இந்த 10 ஆண்டு கால வரம்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here