3,000 இந்தியப் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் புதிய மடிக்கணினி: உயர்கல்வி நிதி உதவி திட்டத்தை அமைச்சர் இரமணன் நிறைவேற்றினார்

மலேசிய இந்திய மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, 2025-ஆம் ஆண்டிற்கான உயர்கல்வி அனுமதி உதவித் திட்டத்தின்  கீழ் 4,165 மாணவர்கள் பயன்பெறுவதை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் இராமகிருஷ்ணன் உறுதிப்படுத்தியுள்ளார்.  ​இதற்கென மொத்தம் 8.347 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கோலாலம்பூர், மலாயா பல்கலைக்கழகத்தின் துங்கு சான்சலர் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற ‘இந்திய மாணவர்களுடனான பிரதமரின் கலந்துரையாடல்’ நிகழ்வில் இரமணன் குறிப்பிட்டார்.  இத்திட்டத்தின் கீழ், உயர்கல்வியில் நுழையும் இந்திய மாணவர்களுக்குத் தலா 2,000 ரிங்கிட் பண உதவியும், மாற்றுத்திறனாளி  மாணவர்களுக்குத் தலா 3,000 ரிங்கிட் பண உதவியும் வழங்கப்படுகிறது.

 இவற்றுடன், நாடு தழுவிய அளவில் பயிலும் 3,000 இந்தியப் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் புதிய மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் வழங்கும் திட்டத்தையும் தங்களின் அமைச்சின் கீழ் உள்ள மித்ரா நிறைவேற்றியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.  தமது தலைமையிலான மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவான ‘மித்ரா’, அதன் தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயர் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இந்தத் திட்டங்கள் மிகச்சிறப்பாகச் செயல்படுத்தப்படுகின்றன என்பதை அவர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னிலையில்  குறிப்பிட்டார்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ரமணன், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கல்வி, இந்திய இளைஞர்களுக்குச் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வதே மடானி அரசாங்கத்தின் இலக்கு என தெளிவுபடுத்தினார். ​இந்த உதவிகள் அனைத்தும் இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கான ஒரு முக்கிய முதலீடு என்றும், இதன் மூலம் இந்திய இளைஞர்கள் எதிர்காலப் போட்டிகளை எதிர்கொள்ளத் தயாராவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
-​ராமேஸ்வரி ராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here