வியட்நாம் சந்தையில் டவலுடன் நடனமாடிய இந்தியப் பெண்… லைக்ஸ் வாங்குவதற்காக இப்படியா? கொதிக்கும் நெட்டிசன்கள்

ஹனோய், இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மென்பொருள் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவ பணியாளர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள், சர்வதேச நாடுகளுக்கு சென்று சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்தியாவின் மனிதவளம் உலக அளவில் நமது நாட்டிற்கு தனித்துவமான நன்மதிப்பை பெற்றுத் தருகிறது.

அதே சமயம், பொது இடங்களில் இந்தியர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக நிலவி வருகிறது. பொது இடங்களில் குப்பை கொட்டுவது, எச்சில் துப்புவது, செல்போனில் சத்தமாக பேசுவது என்பது போன்ற செயல்கள் நமது நாட்டில் நாம் அன்றாடம் பார்க்கும் இயல்பான நிகழ்வுகளாக உள்ளன. ஆனால் சில நாடுகளில் இவை பெரும்பாலும் முகம்சுளிக்க வைக்கும் செயல்களாக பார்க்கப்படுகின்றன.

வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்று அங்கேயே வசிக்கும் இந்தியர்கள் அந்நாடுகளின் சட்ட திட்டங்களை மதித்து , பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டாலும், சிலர் சுற்றுலாவுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும்போது பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடுவதால் ஒட்டுமொத்தமாக அது இந்தியர்களின் நன்மதிப்பை குறைத்துவிடுகிறது. அத்தகைய நிகழ்வு ஒன்று சமீபத்தில் நெட்டிசன்களை கொதிப்படையைச் செய்துள்ளது.

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமான இந்தியப் பெண் ஒருவர், வியட்நாம் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். வியட்நாமில் பிரபலமான இரவு சந்தைக்கு சென்ற அவர், சாலையின் நடுவே உடலில் ஒரு டவலை மட்டும் கட்டிக்கொண்டு நடனமாடியுள்ளார். அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். கடந்த மே மாதம் அவர் வீடியோவை பதிவிட்ட நிலையில், சமீபத்தில்தான் அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த பலரும், லைக்ஸ் வாங்குவதற்காக இப்படியெல்லாம் செய்வதா?, இதுபோன்ற செயல்களால்தான் இந்தியர்கள் மீது கெட்டப்பெயர் ஏற்படுகிறது என்பது போன்ற கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இதையடுத்து அந்த பெண் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது வீடியோவை நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள் அந்த நாடுகளின் சட்டங்களையும், அவர்களின் கலாசாரத்தையும் மதித்து நடந்து கொள்ள வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here