இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட்… இனி டெக்ஸ்ட் மட்டும் அல்ல, புகைப்படத்திலும் ரிப்ளை!

பயனர்களை கவரும் இன்ஸ்டாகிராம்

நவீன உலகில் ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சமூக வலைத்தளங்களும் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்கள் தகவல் பரிமாற்றம் மட்டுமல்லாமல், திறமைகளை வெளிப்படுத்தும் முக்கிய தளங்களாகவும் விளங்கி வருகின்றன.

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இன்ஸ்டாகிராமை இந்தியாவில் மட்டும் சுமார் 45 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக டிக்-டாக் தடை செய்யப்பட்ட பிறகு அறிமுகமான ‘ரீல்ஸ்’ வசதி, இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல புதிய அம்சங்களை இன்ஸ்டாகிராம் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.

கமெண்ட்டுக்கு புகைப்படத்தில் பதில் அளிக்கும் வசதி

அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் தனது கமெண்ட் பிரிவில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை கமெண்ட்களுக்கு எழுத்துகள் மற்றும் எமோஜிகள் மூலம் மட்டுமே பதிலளிக்க முடிந்த நிலையில், இனி புகைப்படத்தையும் பதிலாக பதிவிடும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களின் கருத்துகளை மேலும் சுவாரஸ்யமாகவும், காட்சிப்பூர்வமாகவும் பகிர முடியும். இந்த வசதி படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here