தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவரை டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கர்நாடகத்தை சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தை தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்-அமைச்சர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.

வெட்கக்கேடு இல்லையா?

காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக போராடி கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவை சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டு பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கான பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.

ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here