தாய்லாந்தில் அதிர்ச்சி.. 11 வயது சிறுவன் ஓட்டிய வாகனம் மோதி 9 பவுத்த துறவிகள் பலி

பாங்காக், தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில், புனித பயணமாக நடந்து சென்று கொண்டிருந்த பவுத்த துறவிகள் குழுவின் மீது 11 வயது சிறுவன் ஓட்டி வந்த பிக்கப் டிரக் மோதியதில் ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து

தலைநகர் பாங்காக்கிலிருந்து வடகிழக்கே சுமார் 600 கி.மீ தொலைவில் உள்ள முக்தஹான் (Mukdahan) மாகாணத்தை சேர்ந்த மொத்தம் 35 துறவிகள் இந்தப் புனிதப் பயணத்தை மேற்கொண்டிருந்தனர். விபத்து நடந்த சம்பவ இடத்திலேயே ஐந்து துறவிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மற்ற நால்வர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மொத்தம் 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அம்மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நடைபயணம்

விபத்து நடப்பதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்புதான், உபோன் ரட்சதானி (Ubon Ratchathani) மாகாணத்தை நோக்கி 260 கி.மீ. தூர நடை பயணத்தை அக்குழு தொடங்கியிருந்தது.

உள்ளூர் மீட்புக் குழுவான ‘ருவாம் ஜெய் முக்தஹான் மீட்புச் சங்கம்’ (Ruam Jai Mukdahan Rescue Association) வெளியிட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளில், டிரக் மோதும் முன் துறவிகள் சாலையோரத்தில் வரிசையாக நடந்து செல்வது பதிவாகியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய அந்த சிறுவன் தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளான்.

அதிகாரிகள் விசாரணை

மாநில குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் வந்த பிறகு அவனிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு சாலையிலிருந்து விலகி தங்கள் குழுவின் மீது மோதியதாகத் துறவிகள் விவரித்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சிறுவனின் வீட்டில் இருந்து அந்த வண்டி குடும்பத்தின் அனுமதியின்றி எடுக்கப்பட்டது என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here