கோலாலம்பூர்:
பினாங், ஜார்ஜ் டவுன் பாரம்பரியக் கட்டடங்கள் அமைந்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘சியூ ஜெட்டி’ (Chew Jetty) பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 5 வணிக வளாகங்கள் முற்றாக எரிந்து நாசமாகின.
இன்று அதிகாலை 1.08 மணியளவில் பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்தது. தகவலறிந்த அடுத்த இரண்டு நிமிடங்களில் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இச்சம்பவம் குறித்து வடகிழக்கு மாவட்ட மண்டலம் 1 செயல்பாட்டு அதிகாரி ரோஸ்லி இப்ராஹிம் கூறுகையில், “இந்த தீ விபத்தில் கார் பழுதுபார்க்கும் பட்டறை, வெல்டிங் கடை மற்றும் மர ஆலை உட்பட 5 வணிக வளாகங்கள் பாதிக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்களின் விரைவான நடவடிக்கையால் அருகில் இருந்த பெட்ரோல் பங்கிற்குத் தீ பரவாமல் தடுக்கப்பட்டதோடு, அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை” எனக் கூறினார்.
பாயா தெருபோங், ஜாலான் பேராக் மற்றும் லெபோ பண்டாய் ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 30 வீரர்கள், 17 தன்னார்வத் தீயணைப்புப் படையினர், மலேசிய சிவில் பாதுகாப்புப் படை (APM) மற்றும் காவல்துறையினர் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
இத்தீ விபத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 30 ஆண்டுகளாக டி-ஷர்ட் பிரிண்டிங் கடை நடத்தி வரும் தோ ஐக் ஆன் (50) கூறுகையில், வாடிக்கையாளர்களின் நூற்றுக்கணக்கான ஆடைகள் கடையில் இருந்ததாகவும், அவை அனைத்தும் தீயில் சாம்பலாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.
1997 முதல் கார் பெயிண்டிங் கடை நடத்தி வரும் ஹோங் ஜிங் லியான் (60) என்பவர், தனது கடையில் இருந்த சுஸுகி ஸ்விஃப்ட், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய ஆடம்பர கார்கள் தீக்கிரையானதாகவும், இதனால் சுமார் RM1 மில்லியன் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதத்தின் துல்லியமான மதிப்பு குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களத்தின் கீழ் உள்ள சியூ ஜெட்டி பகுதி, பினாங்கின் பழமையான பாரம்பரியக் சீனக் குடியேற்றப் பகுதிகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.























