கோலாலம்பூர்:
பிரதமரை அடிக்கடி மாற்றுவது நடக்கக்கூடாது என்று அம்னோ தேசியத் தலைவரும் துணைப்பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி நேற்று கூறினார். பிரதமர் மக்கள் நலன் மீது தொடர்ந்து கவனம் செலுத்தி நாட்டின் பொருளாதாரத்திற்கு துரித வளர்ச்சியைக் கொண்டு வருவதற்கு வழிவிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

திட்டமிடப்பட்டதுபோல் மக்கள் நலன் காக்கும் ஒவ்வொரு திட்டமும் தொடருவதை உறுதி செய்ய ஒற்றுமை அரசாங்கத்தின் சீரான நிலை நீடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். வரும் தவணையிலும் ஒற்றுமை அரசாங்கம் தொடருமா என்பதை 16ஆவது பொதுத் தேர்தல் முடிவுதான் முழுமையாகத் தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
![]()
பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பரம ஏழ்மை நிலையை ஒழிக்கும் திட்டங்கள் தொடர வேண்டும். சிறந்த கல்விச்சேவை தொடர வேண்டும். இவற்றின் மூலம் மக்களின் சுபிட்சத்திற்கு முக்கியத்துவம் அளிக்க முடியும் என்றார் அவர். 16ஆவது பொதுத்தேர்தல் நடைபெறும்போது அடுத்த தவணைக் காலம் தொடங்கும். இது ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கு வெற்றி பெறும் எண்ணிக்கையின் அடிப்படையில் அமையும். இப்போதுள்ள இடங்களை விட கூடுதல் தொகுதிகளை முடிந்தளவு நாம் பெற வேண்டும்.
கடந்த காலங்களை போல் பிரதமரை அடிக்கடி மாற்றவும் கூடாது. அவ்வாறு செய்தால் பொருளாதாரம் வீழ்ச்சியடையும். அமெரிக்க டாலர் உள்ளிட்ட மற்ற நாணயங்களுக்கு நிகரான ரிங்கிட் மதிப்பும் குறையும். அந்நியச் செலவாணியிலும் சரிவு ஏற்படும்.

இவை அனைத்தும் மக்களுக்கு நன்மை தராது. என்னை பொறுத்தவரையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும். ஒற்றுமை அரசாங்கத்திலுள்ள 18 கட்சிகள் இன்றி மற்ற கட்சிகளும் அவரை ஆதரிக்க வேண்டும். இதன் வழி நிலைதன்மைமிக்க அரசியலை மலேசிய அரசாங்கம் கொண்டிருக்க முடியும். மக்கள் ஒருமைப்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார். டிவி 3 நிகழ்ச்சிக்கு அனுப்பிய ஒலிப்பதிவில் பாரிசான் நேஷனல் தலைவருமான ஸாஹிட் இதனை கூறினார்.





















