வாக்காளர்கள் உங்களை ஏன் நிராகரித்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்: அம்னோவுக்கு அறிவுறுத்தல்

 ‘அடுத்த ஆட்சியை அமைக்கும் நிலையில் உள்ள கட்சி’  என்று பேசுவதற்கு முன், 2022 பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் ஏன் தங்களை நிராகரித்தார்கள் என்பதை அம்னோ முதலில் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஓர் ஆய்வாளர் கூறினார். ‘குளோபல் ஆசியா கன்சல்டிங்’ நிறுவனத்தைச் சேர்ந்த ஸாஹருதீன் சானி அஹ்மத் சப்ரி, பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் மக்களுக்கு அம்னோ என்ன வழங்கப்போகிறது என்பதையும், கடந்த காலத் தவறுகளிலிருந்து அக்கட்சி எவ்வாறு பாடம் கற்றுள்ளது என்பதையும் கேள்விக்குள்ளாக்கினார்.

தற்போதைய நிலையில், அரசாங்கத்தை நிர்வகித்த அனுபவம் மட்டுமே அக்கட்சியிடம் பெருமையாகப் பேசக்கூடிய விஷயமாக உள்ளது என்று அவர் கூறினார். 2018இல் பாகத்தான் ஹராப்பான் கூட்டணியால் தோற்கடிக்கப்படுவதற்கு முன்பு, பாரிசான் நேஷனல் 60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. மக்கள் தங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகப் பேசும் அம்னோ தலைவர்களின் ஒரு பிரிவினர் உள்ளனர். ஆனால், உண்மையில் ஒரு தரப்பு மக்கள், அவர்கள் தங்களை எவ்வாறு சிறப்பாக மாற்றிக்கொண்டுள்ளனர் என்பதைப் பார்க்கவே காத்திருக்கிறார்கள் என்று அவர் எப்ஃஎம்டியிடம் கூறினார்.

பொதுச் கூட்டத்தில் அம்னோ தலைவர் அஹ்மத் ஸாஹிட் ஹமிடி ஆற்றிய உரையை, ‘அடுத்த பிரதமர்’ மற்றும் ‘அடுத்த ஆட்சியை அமைக்கும் நிலையில் உள்ள கட்சி’ ஆகியவற்றின் தோரணையில் இருந்ததாக கைரி ஜமாலுதீன் விவரித்திருந்த கருத்து குறித்து ஸாஹருதீன் இவ்வாறு கருத்துரைத்தார். 2022 பொதுத் தேர்தலின் முடிவுகள் அம்னோவுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாடமாக அமைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் என்று சொல்வது மட்டும் போதாது. அவர்கள் சரியாக என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டார்கள்? அரசாங்கம் சார்ந்த நிறுவனங்களின் நிர்வாகத்திலிருந்தா? ஃபெல்டா  விவகாரத்திலிருந்தா? அல்லது தாபோங் ஹாஜி  சர்ச்சையிலிருந்தா?” என்று கேள்வி எழுப்பிய அவர், அதிகாரத்தை இழந்த பிறகு அம்னோ பாடம் கற்றுக்கொண்டதை மக்கள் காண வேண்டும் என்றும் கூறினார். அரசாங்கம் சார்ந்த நிறுவனங்களில் அரசியல் ரீதியான நியமனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதையும், பொருளாதார முடிவுகள் தனிப்பட்ட தொடர்புகளின் அடிப்படையில் அல்லாமல் தகுதியின் அடிப்படையில் எடுக்கப்படுவதையும் அக்கட்சி நிரூபிக்க வேண்டும். அதேவேளையில், தோல்விகளுக்குத் தலைவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் அது காட்ட வேண்டும்.

அம்னோ உண்மையில் தலைமை தாங்க விரும்பினால், வெறும் நிதி உதவிகள் மற்றும் மானியங்களைப் பற்றி மட்டும் பேசாமல், மிகவும் நம்பகமான பொருளாதாரத் திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்று ஸாஹருதீன் கூறினார். மலாய் மக்களுக்கு அம்னோ  தேவை என்று முழங்குவதன் மூலம் அக்கட்சி தன்னை மீண்டும் நிலைநிறுத்திக்கொள்ள முடியாது. ஏனெனில், கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களின் முடிவுகளும் ‘பாஸ்’ (PAS) கட்சியின் வளர்ச்சியும் அதற்கு மாறான உண்மையையே நிரூபித்துள்ளன. கேள்வி என்னவென்றால், ‘மலாய் மக்களுக்கு அம்னோ தேவையா’ என்பது அல்ல; மாறாக, ‘மலாயின மக்களும் மலேசியர்களும் ஏன் மீண்டும் அம்னோவுக்கு வாக்களிக்க வேண்டும்’ என்பதுதான்.”

கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டதை பொதுமக்களுக்கு உணர்த்த முடிந்தால், வாக்காளர்களுக்கு அம்னோ ஒரு யதார்த்தமான தேர்வாக அமையும் என்று மலாயா பல்கலைக்கழகத்தின் சமூக-அரசியல் ஆய்வாளர் அவாங் அஸ்மான் பாவி  கூறினார். ஃபெல்டா (Felda) மற்றும் தாபோங் ஹாஜி (Tabung Haji) தொடர்பான சர்ச்சைகள் போன்ற பல விவகாரங்கள், நாட்டை நிர்வகிக்கும் அம்னோவின் திறன் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். தங்கள் குறைகளை ஒப்புக்கொள்வது அம்னோவை பலவீனப்படுத்தாது. மாறாக, சிறப்பாக ஆட்சி செய்யத் தயாராக இருக்கும் ஒரு கட்சியாக அவர்களின் முதிர்ச்சியையே அது வெளிப்படுத்தும்  என்று அவர் கூறினார். அரசாங்கத்தில் தங்களுக்குள்ள நீண்டகால அனுபவத்தை, புதிய தலைமுறைத் தலைவர்கள், மக்களுக்குப் பொருத்தமான கொள்கைகளுடன் இணைப்பதன் மூலமும் அம்னோ வாக்காளர்களை ஈர்க்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here