கோலாலம்பூர்:
பேராக், மஞ்சுங் பகுதியில் சட்டவிரோதக் குடியேறிகளை (PATI) கடத்திய விவகாரம் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையிலான 9 மாதங்களில் நடத்தப்பட்ட 13 ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் மொத்தம் 384 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 384 பேரில் 368 இந்தோனேசியப் பிரஜைகள், 9 இந்தோனேசியச் சிறுவர்கள், 2 வங்காளதேசப் பிரஜைகள் மற்றும் இக்கடத்தலுக்கு உதவிய 5 உள்ளூர் மலேசியர்களும் அடங்குவர்.
மஞ்சுங் மாவட்டக் காவல் துறை தலைமையகம் (IPD), புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை, கடல்சார் காவல் படை மற்றும் மலேசியக் கடல்சார் அமலாக்க நிறுவனம் (APMM) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்நடவடிக்கைகளை மேற்கொண்டன.
இச்சம்பவங்கள் தொடர்பாக 11 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டு, 320 பேர் மீது ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் சட்டவிரோதக் குடியேறிகள் கடத்தல் தடுப்புச் சட்டம் (ATIPSOM) 2007 மற்றும் குடிவரவுச் சட்டம் 1959/63 ஆகியவற்றின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மற்றொரு நடவடிக்கையில், ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்ட 2 மியான்மர் சிறுவர்கள் மற்றும் 2 இந்திய ஆண்கள் மீட்கப்பட்டனர். இதற்குக் காரணமான 3 உள்ளூர்வாசிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
கடந்த ஆகஸ்ட் 18 அன்று நடத்தப்பட்ட சோதனையில், இந்தோனேசியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் மலேசியாவிலிருந்து கடத்த முயன்ற RM185,600 மதிப்பிலான 5.8 கிலோகிராம் மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது அபாயகரமான போதைப்பொருள் சட்டம் 1952-ன் பிரிவு 39B-யின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.























