கோலாலம்பூர்:
செபெராங் பிறையின் பெர்மாத்தாங் பாவ் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளிக்கு முன்பாகச் சாலையைக் கடக்க முயன்ற இரு பள்ளி மாணவிகள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய சம்பவத்தைத் தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய ஓட்டுநரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி காலை 7.20 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான 30 விநாடி பரபரப்பு காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறையினர் உடனடி விசாரணையில் இறங்கினர்.
“இவ்விபத்தில் 8 மற்றும் 9 வயதுடைய இரு பள்ளி மாணவிகள் சிறு காயங்களுக்கு ஆளாகி மருத்துவச் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது” என்று, செபராங் பிறை தென்னா மாவட்டக் காவல் துறைத் தலைவர் நிக் அமினுதீன் ராஜா அப்துல்லா கூறினார்.
இச்சம்பவம் குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 43(1)-இன் கீழ் (அலட்சியமாக வாகனத்தை இயக்குதல்) வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.























