மலேசியாவில் e -invois எனப்படும் மின்னணு பற்றுச்சீட்டு முறை அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இதற்காக பெரிய அளவில் நிதி முதலீடு செய்ய வேண்டும் அல்லது சிக்கலான அமைப்புகளைப் பெற வேண்டும் என்ற அச்சம் சிறு வியாபாரிகள் மத்தியில் நிலவுகிறது.
இத்தகைய கவலைகளுக்குத் தீர்வு காணும் வகையில், மலேசிய உள்நாட்டு வருமான வரித்துறை LHDN தகுதியுள்ள வணிகர்கள் பயன்பெறும் வகையில் ‘MyInvois e-POS’ எனும் சேவையை முற்றிலும் இலவசமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு வருமான வரித்துறை வழங்கியுள்ள தகவலின்படி, ஆண்டு விற்பனை வருமானம் 5 மில்லியன் ரிங்கிட் வரை உள்ள தகுதியான வணிகர்களுக்கு இந்த டிஜிட்டல் விற்பனைத் தளம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. இது e -invois தேவைகளை நிறைவு செய்வதுடன், விற்பனையைப் பதிவு செய்தல், வணிகப் பொருட்களை நிர்வகித்தல், வணிகப் பரிவர்த்தனைகளைக் கண்காணித்தல் போன்ற அன்றாடச் செயல்பாடுகளையும் ஆதரிக்கிறது.
இதைப் பயன்படுத்த விரும்பும் வணிகர்கள் இணைய இணைப்பையும், தற்கால இயக்க முறைமைகளைக் கொண்ட கணினி, மடிகணினி, டேப்லெட் அல்லது ஸ்மார்ட் கைப்பேசி போன்ற ஏதேனும் ஒரு மின்னணு சாதனத்தையும் வைத்திருக்க வேண்டும் என்று உள்நாட்டு வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பத்திற்கு மாறுவதில் தயக்கம் காட்டும் சிறு வியாபாரிகளுக்கு உதவும் வகையில், அந்தத் துறையின் அதிகாரிகளால் நேரடி, தொடர்ச்சியான உதவிகள் வழங்கப்படுவதுடன், பதிவு செய்வதிலிருந்து இவ்வமைப்பைத் தாங்களே இயக்கும் வரை தேவையான அனைத்து விளக்கங்களும் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
மலேசியாவில் வணிக வளாகங்கள், சிறு தொழில்துறையினர் தங்களின் அன்றாட வணிக நடவடிக்கைகளை நவீனமயமாக்க இந்த டிஜிட்டல் முறை பெரிதும் உகந்ததாக இருக்கும். காகிதப் பயன்பாட்டைக் குறைத்து அனைத்துப் பரிவர்த்தனைகளையும் மின்னணு மயமாக்குவது அரசாங்கத்தின் முக்கிய இலக்காகும் என்பதால், சிறு வணிகர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி தங்களின் வணிகத்தை எளிமையாக்கிக் கொள்ளலாம்.
மேலும், உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப சிறு வணிகர்களைத் தயார்படுத்தும் நோக்கில் இந்தச் சலுகை வழங்கப்படுவதாக மலேசிய உள்நாட்டு வருமான வரித்துறை சுட்டிக்காட்டுகிறது. வணிகர்கள் எவ்விதத் தயக்கமுமின்றி இந்த டிஜிட்டல் தளத்தில் இணைந்து பயனடையுமாறும் இதன் மூலமாக நீண்டகால அடிப்படையில் வர்த்தக வளர்ச்சியை மேம்படுத்திக் கொள்ள முடியும் எனவும் அதன் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆண்டு வருமானம் 3 மில்லியன் ரிங்கிட்டுக்கும் குறைவாக உள்ள வணிகர்களுக்கு ‘MyInvois ’ முறை இப்போதைக்கு கட்டாயமாக்கப்படவில்லை என்றாலும், எதிர்கால டிஜிட்டல் பொருளாதாரத்திற்குத் தயாராகும் வகையில் அவர்கள் தாமாக முன்வந்து இதில் இணைவது பெரிதும் ஊக்குவிக்கப்படுகின்றது. டிஜிட்டல் மயமாக்கல் முறையானது e -invois தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், எதிர்காலத்தில் வணிக நிறுவனங்கள் தங்களது ஆவணங்களைப் பாதுகாப்பாகவும் நேர்த்தியாகவும் பராமரிக்க வழிவகுக்கும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்த மேலதிக விவரங்களை அறிய விரும்பும் வணிகர்கள் www.hasil.gov.my/myinvoisepos என்ற உள்நாட்டு வருமான வரித்துறையின் வலைத்தளத்தை நாடலாம் அல்லது அருகில் உள்ள அதன் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

















