சொந்தத் தவறுகளுக்குப் பிறரைக் குறை கூறாதீர்கள்; பாஸ் கட்சிக்கு ராமசாமி அறிவுரை

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி இடைநிறுத்தப்பட்ட விவகாரத்தில், பாஸ் கட்சிக்குத்தான் முழுப் பொறுப்பும் உண்டு என்றும், அதற்காக அக்கட்சி வேறு யாரையும் குறை கூற முடியாது என்றும் ‘உரிமை’ அமைப்பின் தலைவர் பி. ராமசாமி சாடியுள்ளார். சங்கங்களின் பதிவிலாகா  விளக்கம் கோரும் அறிவிப்பை வெளியிட்டு கூட்டணியை இடைநிறுத்துவதற்கு முன்பே,  பெரிக்காத்தானின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு பாஸ்  பல தன்னிச்சையான முடிவுகளை எடுத்ததாக ராமசாமி குற்றம் சாட்டினார்.

ஜூன் மாதத்தில் அரசியல் ஒத்துழைப்பை முடித்துக்கொண்ட பிறகு, பெரிக்காத்தானில் பெர்சத்து  கட்சியின் தீவிரப் பங்கை ஒடுக்குவதற்கான ‘கட்டமைப்பு ரீதியான’ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். ஜூலை 16 அன்று நடைபெற்ற பெரிக்காத்தானின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் பெர்சத்து கட்சி விலக்கி வைக்கப்பட்டதும், கூட்டணியில் அதன் உறுப்பினர் நிலை குறித்த கேள்விகளும்  சங்கங்களின் பதிவிலாவிடம் அளிக்கப்பட்ட புகாரில் அடங்கும். முறையான விவாதங்கள் இன்றி ‘வாவாசன்’ கட்சியைச் சேர்த்துக்கொண்டதும், பெர்சத்து கட்சியை ஓரங்கட்டுவதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியாகும்.

அரசியல் நகர்வுகள் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறாமல் இருந்திருக்கலாம்; ஆனால், கூட்டணியின் அரசியலமைப்புச் சட்டத்தின் தேவைகளைப் புறக்கணிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கையே முக்கியப் பிரச்சினையாகும் என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பெரிக்காத்தான்  கூட்டணியில் தனது ஆதிக்கத்தையும் கட்டுப்பாட்டையும் நிலைநாட்ட, பாஸ் கட்சி இருவேறு விதமான நடைமுறைகளைக் கையாண்டதாக முன்னாள்  ஜசெக தலைவரான ராமசாமி குற்றம் சாட்டினார்.

பெரிக்காத்தானை  வழிநடத்துவதில் பாஸ்  கட்சியின் செயல்பாடுகள் இடைநிறுத்த நடவடிக்கைக்குக் காரணமாக அமைந்திருக்கும் நிலையில், அக்கட்சி வீணாகப் புலம்புவதிலோ அல்லது சங்கங்களின் பதிவிலாகா நடவடிக்கையை அரசியல் பழிவாங்கும் செயல் என்று ஒதுக்கித் தள்ளுவதிலோ அர்த்தமில்லை என்று ராமசாமி கூறினார். கூட்டணியில் உள்ள ஒரு கட்சிக்குக் கூட்டங்களில் பங்கேற்கவும், கருத்துக்களைத் தெரிவிக்கவும், கூட்டணி தொடர்பான முடிவுகளில் வாக்களிக்கவும் வாய்ப்பு மறுக்கப்படும்போது, ​​அக்கூட்டணி எவ்வாறு ஜனநாயகத்தன்மை வாய்ந்தது என்று கூற முடியும்?

தனது சொந்தக் கட்டமைப்பிற்குள் பொறுப்புடைமையைக் கடைப்பிடிக்க மறுக்கும் ஒரு அரசியல் கூட்டணி, மற்றவர்களிடமிருந்து பொறுப்புடைமையை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் மேலும் கூறினார். பெர்சத்து கட்சி அளித்த புகாரின் அடிப்படையில் விளக்கம் கோரும் அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்த வாரத் தொடக்கத்தில்  சங்கங்களின் பதிவிலாகாபெரிக்காத்தானின் கூட்டணியை இடைநிறுத்தியது. பாஸ், பெரிக்காத்தான் ஆகிய இரு அமைப்புகளின் பொதுச் செயலாளரான தக்கியுத்தீன் ஹசான், இந்த இடைநிறுத்த நடவடிக்கைக்குப் பின்னால் அரசியல் அழுத்தம் இருக்கலாம் என்று அப்போது கருத்து தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here