மானியமற்ற RON95, டீசல் விலை நாளை முதல் லிட்டருக்கு 25 சென் குறைகிறது

கோலாலம்பூர்:

எதிர்வரும் நவம்பர் 26 முதல் டிசம்பர் 2-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கு RON97 பெட்ரோல், மானியமற்ற RON95 பெட்ரோல் மற்றும் மானியமற்ற டீசல் ஆகியவற்றின் சில்லறை விலை லிட்டருக்கு 25 சென் குறைக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சகம் (MOF) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தானியங்கி விலை நிர்ணய முறையின் (APM) அடிப்படையில் இப்புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் ரோன் 97 லிட்டருக்கு 4.00 ரிங்கிட்டிலிருந்து 3.75 ரிங்கிட்டாகக் குறைந்துள்ளது.

அதேநேரம் மானியமற்ற ரோன் 95 லிட்டருக்கு 3.72 ரிங்கிட்டிலிருந்து 3.47 ரிங்கிட்டாகக் குறைந்துள்ளது.

மேலும் மானியமற்ற டீசல் லிட்டருக்கு 4.72 ரிங்கிட்டிலிருந்து 4.47 ரிங்கிட்டாகக் குறைந்துள்ளது.

உலக சந்தையில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை சற்றுக் குறைந்துள்ளதாலும், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பினாலும் சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை குறைந்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் விநியோகத் தடை அபாயங்கள் காரணமாக, எதிர்வரும் நாட்களில் உலக எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கங்கள் தொடர வாய்ப்புள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here