டுங்குனில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தின் விடுதி கழிவறையில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த 19 வயது மாணவி, அத்தகவலை மறைத்தது தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக, ஒரு மெக்கானிக் இன்று முதல் நான்கு நாட்களுக்குக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். குழந்தையின் பிறப்பை மறைக்கும் வகையில் உடலை ரகசியமாகப் புதைப்பது அல்லது அப்புறப்படுத்துவது தொடர்பான குற்றவியல் சட்டத்தின் பிரிவு 318-ன் கீழ் இவ்வழக்கை விசாரிக்க ஏதுவாக, நீதிபதி ங் யான் நி இந்தக் காவல் உத்தரவை பிறப்பித்ததாக டுங்குன் காவல் துறைத் தலைவர் நிக் அப் ஹலிம் நிக் மாட் தெரிவித்தார்.
கோலா திரெங்கானுவைச் சேர்ந்த 24 வயதான அந்த மெக்கானிக், மாணவியின் காதலன் என்று நம்பப்படுவதாக அவர் கூறினார். அவர் நேற்று பிற்பகல் 3 மணிக்கு டுங்குனில் உள்ள ஜலான் பந்தாய் தெலுக் லிபாட் பகுதியில் கைது செய்யப்பட்டார்.அந்த மாணவியும் நேற்று மாலை 6 மணிக்கு டுங்குன் காவல் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டதாகவும், ஆனால் உடல்நலக் காரணங்களுக்காக பின்னர் காவல் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் நிக் ஹலிம் தெரிவித்தார்.
செப்டம்பர் 9 அன்று மாலை சுமார் 5 மணியளவில், தான் கர்ப்பமாக இருப்பதை அறியாமலேயே மாணவி விடுதி கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்ததாக அவர் கூறினார். பிறந்த சிறிது நேரத்திலேயே அக்குழந்தை இறந்துவிட்டது.அவர் தனது அறைத் தோழிக்குத் தெரியாமல் குழந்தையின் உடலைத் தனது லாக்கரில் (locker) வைத்திருந்ததாகவும், உடலை ரகசியமாகப் புதைக்க உதவுமாறு தனது காதலனைத் தொடர்பு கொண்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.















