நீண்ட ஆயுளை நாட்டின் வளர்ச்சி வாய்ப்பாக மாற்ற வேண்டும் – ஊழியர் சேமநிதி வாரியம் (KWSP) வலியுறுத்து!

கோலாலம்பூர், செப். 29– மலேசியா முதியோர் நாடாக மாறிவரும் நிலையில், மக்களின் அதிகரித்து வரும் ஆயுட்காலத்தை ஒரு சவாலாக மட்டும் கருதாமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்குமான புதிய வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்று ஊழியர் சேமநிதி வாரியம் (KWSP) வலியுறுத்தியுள்ளது.

ஊழியர் சேமநிதி வாரியம், நிதி அமைச்சுடன் இணைந்து நடத்தும் 2026 அனைத்துலக சமூக நல்வாழ்வு மாநாட்டை (ISWC 2026) இரண்டாவது நிதி அமைச்சர் செனட்டர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஸிசான் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். வாரியத்தின் தலைவர் டான் ஸ்ரீ முகமட் ஸுகி அலி, தலைமைச் செயல்முறை அதிகாரி அஹமட் ஸுல்கர்னைன் ஓன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

தி லாங் ஹாரிஸோன் (The Long Horizon) என்ற கருப்பொருளில் நடைபெறும் 13ஆவது அனைத்துலக சமூக நல்வாழ்வு மாநாடு, நீண்ட ஆயுட்காலம் மக்களின் வாழ்க்கை, வேலை, நிதித் திட்டமிடல் ஆகியவற்றில் ஏற்படுத்தும் மாற்றங்களை ஆராய்கிறது. ஆரோக்கியமான முதுமை, ஓய்வுக்கால வருமானப் பாதுகாப்பு, நீண்டகால பராமரிப்பு, வாழ்நாள் நல்வாழ்வு ஆகியவற்றுக்கான வலுவான கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தப்படுகிறது.

நீண்ட ஆயுள் முறையாகக் கையாளப்பட்டால் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதோடு, சமூகப் பங்கேற்பை அதிகரித்து, புத்தாக்கத்தை ஊக்குவித்து, மனித ஆற்றலையும் மேம்படுத்த முடியும் என்று முகமட் ஸுகி அலி தெரிவித்தார். அதற்கான தயார்நிலையை இன்றே தொடங்குவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரு நாட்கள் நடைபெறும் மாநாட்டில் ஓய்வுக்கால நிதிப் போதுமான நிலை, நிதிப் பாதுகாப்பு, சுகாதாரம், நீண்டகால பராமரிப்பு, சுறுசுறுப்பான முதுமை, தலைமுறைகளுக்கு இடையிலான ஆதரவு, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் புத்தாக்கம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்படுகின்றன. பிற நாடுகள் மேற்கொண்ட கொள்கைச் சீர்திருத்தங்களும் ஆராயப்படுகின்றன.

மாநாட்டுடன் நடைபெறும் கண்காட்சியில் முதியோருக்கு உகந்த வாழ்க்கை முறை, மின்னியல் சுகாதாரப் பராமரிப்பு, முதியோர் பராமரிப்புத் தொழில்நுட்பம், மறுவாழ்வு, நல்வாழ்வு தொடர்பான புத்தாக்கத் தீர்வுகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மக்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாகவும் சுயசார்புடனும் வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும் என மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

ராமேஸ்வரி ராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here