அரசு ஊழியர்கள் ‘Waze’ செயலியைப் பயன்படுத்தத் தடை

இஸ்ரேலில் உருவாக்கப்பட்ட பிரபலமான வழிசெலுத்தல் (navigation) செயலியான ‘Waze’-ஐ அரசு ஊழியர்கள் பயன்படுத்த மலேசிய அரசாங்கம் தடை விதித்துள்ளது.அக்டோபர் 20 தேதியிட்ட கடிதம் ஒன்றில், தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர், பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையில் அன்று நடைபெற்ற தேசிய சைபர் பாதுகாப்பு குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அனைத்துத் துறைத் தலைவர்களும், பொதுச் செயலாளர்களும் இந்த முடிவை ஊழியர்களுக்குத் தெரிவித்து, உடனடியாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிரதமர் துறையின் கீழ் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒரு பகுதியான ‘தேசிய சைபர் பாதுகாப்பு முகமை’ (National Cyber ​​Security Agency), இந்த உத்தரவைச் செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு அமைப்பாகச் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் உருவாக்கப்பட்ட ‘TuJu’ எனும் உள்நாட்டு வழிசெலுத்தல் செயலியைப் பயன்படுத்துமாறு, பிரதமர் அன்வார் சமூக ஊடகங்கள் வாயிலாக மலேசியர்களை ஊக்குவித்துள்ளார்.’Waze’ செயலியானது இஸ்ரேலிய அரசாங்கத்தின் சட்டங்களுக்கு உட்பட்டது என்பதால், பயனர்களின் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மற்றும் அவர்களின் நடமாட்டங்கள் குறித்த தகவல்கள் கசியக்கூடும் என்ற கவலையை அவர் சுட்டிக்காட்டினார். ஏற்கெனவே ஈராக் நாடும் ‘Waze’ செயலிக்கு முழுமையான தடையை அறிவித்துள்ளது. இது 2027-ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.ஈரானும் முன்னதாக, இஸ்ரேலுடனான தொடர்பு காரணமாக ‘Waze’ செயலிக்கான அணுகலைத் தடுத்து, கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

2017-ஆம் ஆண்டின் தரவுகளின்படி, ஆசியாவிலேயே அதிக ‘Waze’ பயனர்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக மலேசியா இருந்தது. அப்போது அங்கு மாதந்தோறும் சுமார் 60 லட்சம் பேர் இந்தச் செயலியைப் பயன்படுத்தினர். இதில் கோலாலம்பூரில் மட்டும் சுமார் 25 லட்சம் பயனர்கள் இருந்தனர். பயனர்கள் மாதம் ஒன்றுக்கு சுமார் 12 லட்சம் போக்குவரத்து எச்சரிக்கைகளைப் (traffic alerts) பகிர்ந்துகொண்டனர். ‘Waze’ செயலியை கூகுள் நிறுவனம் 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் சுமார் 1.15 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது. இந்தச் செயலி 2008ஆம் ஆண்டு இஸ்ரேலில், மூன்று இஸ்ரேலிய தொழில்முனைவோர்களால் உருவாக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here