பண்டிகை சூழலை சர்ச்சையாக்க வேண்டாம்! அதிகாரப்பூர்வ சொல் ‘தீபாவளி’ (Deepavali) மட்டுமே: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அமைச்சர் ஹன்னா இயோ

மலேசியாவில் பண்டிகையைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ சொல் ‘தீபாவளி’ (Deepavali) மட்டுமே என்றும், இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் பிரதமர் துறை அமைச்சர் (கூட்டரசு பிரதேசம்) ஹன்னா இயோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் ஏற்பாடு செய்துள்ள பதாகைகளில் ‘தீபாவளி’ என்ற சொல்லே 61-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரதானமாக இடம்பெற்றுள்ளதாகவும், ஒரு சில இடங்களில் (சுமார் 4 முறை) ‘தீவாளி’ (Diwali) என்ற சொல் தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்காக ஒட்டுமொத்தப் பண்டிகை சூழலையும் சர்ச்சையாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கருத்து வேறுபாடுகளுக்காக பதாகைகளை மூடுவது, சேதப்படுத்துவது போன்ற வன்முறைப் போக்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று எச்சரித்த அவர், இதுபோன்ற சூழல்களைத் தண்டிப்பதற்கான களமாக மாற்றாமல், பல இனங்கள் வாழும் நாட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே பயன்படுத்த வேண்டும் என்றார்.

மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 1.8 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு, கடை வாடகைக் குறைப்பு என இந்திய சமூகத்தினரின் வசதிக்காக மாநகராட்சி செய்துள்ள ஆக்கப்பூர்வமான பணிகளைப் பாராட்டி, அனைவரும் நல்லிணக்கத்தோடு பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

ராமேஸ்வரி ராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here