மோட்டார் சைக்கிள், மீன் ஏலம் மூலம்180,000 ரிங்கிட்டை திரட்டிய  அக்மல்

அவதூறு வழக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக்கிற்கு வழங்க வேண்டிய 300,000 ரிங்கிட் தொகையைச் செலுத்துவதற்காக, அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மல் சலே, தனது மோட்டார் சைக்கிள், திலாப்பியா மீன்களை ஏலம் விட்டு சுமார் 180,000 ரிங்கிட்டை திரட்டியுள்ளார். ஃபேஸ்புக் பதிவொன்றில், ஏலம் மூலம் கிடைத்த தொகையுடன் தனது குடும்பத்தின் சேமிப்பையும் சேர்த்து, தெரசா கோக்கிற்கு வழங்க வேண்டிய இழப்பீடு மற்றும் சட்டச் செலவுகளைச் செலுத்தப்போவதாகவும், அடுத்த வாரத்திற்குள் இந்தத் தொகையை முழுமையாகச் செலுத்திவிட முடியும் என்றும் அக்மல் தெரிவித்துள்ளார்.

எனக்கு மிகவும் பிடித்தமான ஹோண்டா X-ADV மோட்டார் சைக்கிள் 150,000 ரிங்கிட்டிற்க்கு விற்கப்பட்டது. அதேபோல், எனது குளத்தில் இருந்த அனைத்து மீன்களையும் விற்றதன் மூலம் சுமார் 30,000 ரிங்கிட் கிடைத்தது. ஆக மொத்தம், இந்த விற்பனைகள் மூலம் சுமார் 180,000 ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். தன்னுடைய ஆதரவாளர்களிடம் பணம் வழங்க வேண்டாம் என்று பலமுறை கேட்டுக்கொண்ட போதிலும், மக்கள் முன்வந்து நன்கொடைகளை வழங்கியதற்காக, காணொளி ஒன்றின் வாயிலாக அவர்களுக்கு அக்மல் நன்றி தெரிவித்துக் கொண்டார். இன்றும் கூட பலர் நன்கொடைகளை வழங்கியுள்ளனர். ஒருவர் மட்டும் 5,000 ரிங்கிட் வழங்கியுள்ளார் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஏலம் என்பது நன்கொடைகளைப் பெறுவதற்காகச் செய்யப்பட்ட ஒரு விளம்பர உத்தி அல்ல என்று மறுத்த அக்மல், தனது சொந்த சேமிப்பு போதாத காரணத்தினால், தெரசா கோக்கிற்கு வழங்க வேண்டிய பணத்தைத் திரட்டவே தனது சொத்துகளை விற்றதாகத் தெரிவித்தார். தன்னிடம் கிடைத்த நன்கொடைகளை, தங்களை விட அதிகத் தேவைப்படுபவர்களுக்கு வழங்க அனுமதி கோரி, நன்கொடையாளர்களிடம் பேசப்போவதாகவும் அவர் கூறினார்.

ஒவ்வொரு பைசாவும் எப்படிப் பகிர்ந்தளிக்கப்பட்டது என்பதற்கான விவரங்களை எனது சமூக ஊடகக் கணக்குகளில் பதிவிடுவேன். உங்கள் அனைவரின் அன்பிற்கும் கருணைக்கும் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார். திங்களன்று மலாக்கா உயர் நீதிமன்றம் தெரசா கோக்கிற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, அக்மல் அந்த அவதூறு வழக்கில் தோல்வியடைந்தார். நீதிமன்ற உத்தரவின்படி, அவர் இழப்பீடாக 250,000 ரிங்கிட்டும் சட்டச் செலவுகளுக்காக  50,000 ரிங்கிட் என மொத்தம் 300,000 ரிங்கிட்டை செலுத்த வேண்டியுள்ளது.

செப்டம்பர் 2024இல் அக்மல் வெளியிட்ட கருத்துகளே இந்த வழக்கிற்குக் காரணமானது. அதில் அவர் தெரசா கோக்கை “முதிய நயோன்யா” (old nyonya) என்று குறிப்பிட்டதுடன், அவரது நெற்றியில் “ஹலால் அல்லாதது” (non-halal) என்று முத்திரை குத்தப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். பன்றி இறைச்சி அல்லது மதுபானம் பரிமாறாத உணவகங்கள்,உணவு வணிகங்கள் ஹலால் சான்றிதழ் பெற வேண்டும் என்ற அக்மலின் முன்மொழிவு, அந்த வணிகங்களுக்கு, குறிப்பாகச் சிறிய அளவிலான நிறுவனங்களுக்குச் சுமையாக அமையக்கூடும் என்று அவர் எச்சரித்ததைத் தொடர்ந்து இது நிகழ்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here