காதலில் ஏமாற்றப்பட்டு மனதளவில் உடைந்தேன் – நடிகை ரெஜினா கசாண்ட்ரா…

நடிகை ரெஜினா தனது தனிப்பட்ட வாழ்க்கை, காதலில் சந்தித்த கசப்பான அனுபவம், துரோகம் மற்றும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் ‘கண்ட நாள் முதல், அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜெமினிகணேசனும் சுருளி ராஜனும், மிஸ்டர் சந்திரமவுலி, நெஞ்சம் மறப்பதில்லை, சரவணன் இருக்க பயமேன், கான்ஜூரிங் கண்ணப்பன், செக்சன் 108’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இறுதியாக, ‘விடாமுயற்சி’யிலும் அஜித்துக்கு வில்லியாக நடித்து அசத்தியிருந்தார்.

தற்போது, ’மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கரின் ‘தி வைவ்ஸ்’ படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், ரெஜினா அளித்த பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை, காதலில் சந்தித்த கசப்பான அனுபவம், துரோகம் மற்றும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதில், “தனது காதல் 2020-ஆம் ஆண்டே முடிவுக்கு வந்துவிட்டது. அந்த துயரத்தில் இருந்து நான் மீண்டு வர, சொல்லொணா மனவேதனைக்கு உள்ளாகினேன். அந்த காதல் உறவில் நான் கடுமையாக ஏமாற்றப்பட்டேன். அதனால் மனதளவில் முற்றிலும் உடைந்து போனேன். 2020 ஆம் ஆண்டு என் காதல் உறவில் இந்த துரோகம் ஏற்பட்டபோது, இனிமேல் கொஞ்ச காலத்திற்கு இதுபோன்ற எந்த உறவிலும் ஈடுபடக்கூடாது என முடிவெடுத்தேன். என்னுடைய நேரத்தையும் கவனத்தையும் எனக்காக மட்டுமே செலவிட வேண்டும் என்று நினைத்தேன். அந்த நேரத்தில் தான் கொரோனா ஊரடங்கும் தொடங்கியது. அதனால் முழு நேரத்தையும் எனக்காக செலவிட்டு சுய அன்பை கொடுத்துக் கொண்டேன். இன்று நான் இந்தத் தெளிவான இடத்திற்கு வந்திருப்பதற்கு அதுவே முக்கியக் காரணம்.

பெண்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்
பெரும்பாலான பெண்களின் வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் தவறான முறையில் தொடப்படுவது, பாலியல் அத்துமீறல் போன்ற கொடூரங்கள் நடந்திருக்கின்றன. தோழிகளிடம் பேசும்போது தான் நமக்கு புரிந்தது… இது அத்தனை பெண்களின் வாழ்க்கையிலும் நடந்த ஒரு கசப்பான உண்மை என்று. காதல் உறவுகளில் ஏமாற்றப்படுவது பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் ஒரு பொதுவான விஷயமாக இருக்கிறது. நமக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறதா என நினைக்க கூடாது. பெண்கள் ஒன்றாக இணைந்து இதுபோன்ற அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அழ வேண்டும் என்று தோன்றினால் மனதார அழுங்கள்
வாழ்க்கையில் எதையாவது இழக்கும்போது துக்கம் நிச்சயமாக இருக்கும். அழ வேண்டும் என்று தோன்றினால் மனதார அழுங்கள், காலையிலிருந்து இரவு வரை அழ வேண்டும் என்றாலும் அழுங்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன்? ஏன் இப்படி எதிர்வினையாற்றுகிறேன்? என உங்களை நீங்களே கேள்வி கேட்டு சுய சந்தேகம் கொள்ளாதீர்கள். உங்களை நீங்களே குறை சொல்லி கொள்ள வேண்டாம். உங்கள் வாழ்க்கையில் ஒரு வலி நிறைந்த சம்பவம் நடந்துள்ளது. அதிலிருந்து வெளியே வரத் தேவையான அன்பையும் அக்கறையையும் முதலில் உங்களுக்கு நீங்களே கொடுத்து கொள்ளுங்கள்” என நடிகை ரெஜினா கசாண்ட்ரா பேசி உள்ளார்.

நடிகை ரெஜினா கசாண்ட்ரா திரைத்துறைக்கு அறிமுகமாகி 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here