தேசிய மாணவர் படை விரிவாக்க திட்டம் -ராஜ்நாத் சிங்

டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த சுதந்திர தினவிழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, தேசிய மாணவர் படையை (என்.சி.சி.) விரிவாக்குவது குறித்து பேசினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நமது எல்லை பகுதிகளில் 173 மாவட்டங்கள் உள்ளன. இதில் சில மாவட்டங்கள் நமது கடல் எல்லையுடனும், வேறு சில மாவட்டங்கள் மற்ற நாடுகள் மற்றும் கடற்பகுதிகளை எல்லையாக கொண்டிருக்கின்றன. வருகிற நாட்களில் இந்த எல்லையோர மாவட்டங்களில் தேசிய மாணவர் படை விரிவுபடுத்தப்படும்’ என்று கூறினார்.

இந்த எல்லைப்பகுதிகளில் இருந்து சுமார் 1 லட்சம் தேசிய மாணவர் படைக்கு பயிற்சி அளிப்போம் எனக்கூறிய பிரதமர் மோடி, இதில் 3-ல் ஒரு பகுதியினர் நமது மகள்களாக (பெண்கள்) இருப்பர் என்றும் தெரிவித்தார்.

பிரதமர் மோடி பரிந்துரைத்த பெரிய அளவிலான இந்த விரிவாக்க திட்டத்துக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்து உள்ளதாக ராணுவ அமைச்சகம் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-

இந்த திட்டத்தின்படி மேற்படி 173 எல்லையோர மற்றும் கடலோர மாவட்டங்களில் 1000 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு தேசிய மாணவர் படை அறிமுகப்படுத்தப்படும். இந்த மாவட்டங்களில் இருந்து மொத்தம் 1 லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த படையில் சேர்க்கப்படுவார்கள். இதில் 3-ல் ஒரு பகுதியினர் மாணவிகளாக இருப்பர்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்படி எல்லையோர மாணவர்களுக்கு என்.சி.சி. பயிற்சி அளிப்பதற்காக மொத்தம் 83 தேசிய மாணவர் படை பிரிவுகள் மேம்படுத்தப்படும். இதில் ராணுவம் சார்பில் 53, கடற்படை மற்றும் விமானப்படை சார்பில் முறையே 20 மற்றும் 10 பிரிவுகள் மேம்படுத்தப்படும்.

இந்த எல்லையோர என்.சி.சி. மாணவர்களுக்கு ராணுவம் பயிற்சியளிக்கும். அதேநேரம் கடலோர பகுதி என்.சி.சி. பிரிவுகளுக்கு கடற்படையும், விமானப்படை தளங்கள் அமைந்திருக்கும் பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு விமானப்படையும் உதவும்.

என்.சி.சி.யை விரிவுபடுத்தும் இந்த திட்டம் மாநில அரசுகளின் உதவியுடன் செயல்படுத்தப்படும்

இவ்வாறு ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here