சட்டவிரோத குடியேறிகளுக்கு உதவும் மலேசியர்கள் மீது கடுமையான நடவடிக்கை

கோலாலம்பூர்: மலேசியாவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினருக்குத் துணைபுரியும் மலேசியர்கள் மீது கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். உள்ளூர் அதிகாரிகளின் அனுமதி அல்லது உரிமம் இன்றி வணிகங்களை நடத்தும் நபர்கள் மற்றும் இத்தகைய செயல்களுக்குத் தங்கள் நிலத்தையோ அல்லது இடங்களையோ பயன்படுத்த அனுமதிக்கும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று துணைப் பிரதமர் புதன்கிழமை (நவம்பர் 4) நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

டத்தோ முகமது சுஹைமி அப்துல்லா (பிஎன்-லங்காவி) எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். 2021 முதல் இன்று வரை எத்தனை ரோஹிங்கியா மக்கள் லங்காவிக்கு சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர் என்றும், சட்டவிரோத நுழைவு மற்றும் மனிதக் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும் அவர் கேட்டிருந்தார். மலேசிய கடல் எல்லைக்குள் நுழைய முயற்சிக்கும் அல்லது நில எல்லைகளைக் கடக்க முயலும் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவது தொடர்பாக, தேசிய பாதுகாப்பு கவுன்சில் (NSC) ‘நடமாட்ட வழிகாட்டுதல் எண் 1/2022’ (Movement Directive No. 1/2022)-ஐ வெளியிட்டுள்ளதாக அகமது ஜாஹித் தெரிவித்தார்.

இந்த வழிகாட்டுதலானது, லங்காவிக்குள் நுழையும் சட்டவிரோத குடியேறிகள் உட்பட, பாதுகாப்புப் படைகளின் கண்காணிப்பு மற்றும் வெளியேற்றும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் நோக்கம் கொண்டது என்று அவர் கூறினார். நாட்டின் தற்போதைய எல்லைக் கட்டுப்பாட்டு அணுகுமுறை என்பது வெறும் சுவர்கள் அல்லது வேலிகளை அமைப்பது மட்டுமல்ல. செயற்கை நுண்ணறிவு (AI), ட்ரோன்கள் மற்றும் நவீன கண்காணிப்பு அமைப்புகள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதையும் உள்ளடக்கியது என்று அவர் குறிப்பிட்டார்.

லங்காவியின் புக்கிட் மாலுட்டில் நீண்டகாலமாக நீடிக்கும் குடியேற்றப் பிரச்சினை குறித்துப் பேசிய அகமது ஜாஹிட், மே 4, 2024 அன்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற ‘கெடா மாநில மேம்பாடு குறித்த சிறப்புக்கூட்டம்’-இன் முடிவின்படி, அங்குள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை மறுசீரமைப்பதற்கான திட்டங்களை ஆய்வு செய்து ஒருங்கிணைக்குமாறு தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு (NSC) அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதனை ஒருங்கிணைப்பதற்காக, மத்திய மற்றும் மாநில அரசு அமைப்புகளுடன் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இதுவரை 10 கூட்டங்களையும் கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஒப்புதலைப் பெறுவதற்கான பல்வேறு வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

2024 செப்டம்பரில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, புக்கிட் மாலுட்டில் வசிக்கும் 4,584 பேரில் 92.2% பேர் மலேசியர்கள் என்றும், மீதமுள்ளவர்கள் மலேசியக் குடியுரிமை பெறாதவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார். அமலாக்க நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அகமது ஜாஹிட், 2022-ஆம் ஆண்டு முதல் அப்பகுதியில் காவல்துறை 267 நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.

மேலும், லங்காவி பகுதியில் பாதுகாப்பு, போதைப்பொருள், குடிவரவு மற்றும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான அமலாக்க நடவடிக்கைகள் 2026-ஆம் ஆண்டு முழுவதுமாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் புகிட் மாலுட் (Bukit Malut) சமூகத்தினர் சம்பந்தப்பட்ட குறிப்பிடத்தக்க குற்றச் செயல்கள் எதுவும் லங்காவி மாவட்ட காவல் தலைமையகத்தால் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here